டெல்லி, ஆகஸ்ட் 22 – பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராத ஒரு காரியத்தை சத்தம் போடாமல் செய்துள்ளார். அதாவது முக்கிய அமைச்சரகங்களில் ரகசியக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் எந்த நிலையிலும் தனது அரசை பதம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். முதல் கட்டமாக தற்போது பெரியஅளவில் பணம் புழங்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகரத்தில் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அனைத்து முக்கிய அமைச்சரகங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைவரையும் மோடி கண்காணிக்கவுள்ளாராம். சுதந்திர தினத்தின்போது மோடி உரையாற்றுகையில், நானும் லஞ்சம் வாங்க மாட்டேன். மற்றவர்களையும் லஞ்சம் வாங்க விட மாட்டேன் என்றார்.
சொன்னதோடு நில்லாமல் தற்போது லஞ்ச லாவண்யத்தை தனது அமைச்சரங்களுக்குள் அண்ட விடாமல் தடுக்கும் நடவடிக்கையாக இந்த சிசிடிவி கேமரா வேலையில் குதித்துள்ளார் மோடி.
அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என யாருமே ஊழல் கரை படிந்தவர்களாக இருக்கக் கூடாது என்பதில் மோடி உறுதியாக உள்ளாராம்.
அதன்படி அனைத்து முக்கிய அமைச்சரகங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த அவர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரகத்தில் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
பல முக்கியத் துறை அலுவலகங்களிலும் இதுபோல கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சகமும் இந்த பட்டியளில் உள்ளது.
அதேபோல அனைத்து அமைச்சக குறிப்புகளையும், பிரதமர் அலுவலக வழிகாட்டுதலின்படி தயாரிக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரகங்கள் இனிமேல் இந்தக் குறிப்புகளை தாங்களாகவே தயாரிக்க முடியாது.
இனிமேல் அமைச்சரவை குறிப்புகள் அனைத்தையும் பிரதமர் அலுவலகத்திடம் ஆலோசனை பெற்றுசெய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 10 வருடங்களில் மத்திய செய்தி விளம்பர இயக்குநரகம் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த அனைத்து விளம்பரங்களையும் ஆய்வு செய்யவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளாராம்.
இதுதொடர்பான அனைத்து தகவல்கள், விவரங்கள், கோப்புகளை அனுப்பி வைக்க செய்தி விளம்பரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அதேபோல அனைத்து மத்திய அமைச்சகரங்களையும் தொடர்ந்து மோடி கண்காணித்து வருகிறாராம். அவ்வப்போது அமைச்சரகங்களுக்கு மோடியிடமிருந்து திட்டுகளும் கிடைக்கிறதாம். திடீர் திடீரென மோடியிடமிருந்து அழைப்புக்களும் வருகிறதாம்.
சமீபத்தில் ஒரு அமைச்சர் ஐந்து நட்சத்திர உணவு விடுதி ஒன்றில், ஒரு தொழிலதிபருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். சாப்பாட்டுக்கு நடுவே அவருக்கு திடீரென மோடியிடமிருந்து கைபேசி அழைப்பு வந்துள்ளது. பதறிப் போய் விட்டாராம் அந்த அமைச்சர்.
அந்த அழைப்பு எதற்கு என்று அதற்கு மேல் அமைச்சருக்கு விளக்கத் தேவை இருக்கவில்லை. உடனடியாக சாப்பாட்டை முடித்து விட்டு வேகமாக இடத்தைக் காலி செய்தாராம் அந்த அமைச்சர்.
அதேபோல இன்னொரு அமைச்சர் ஜீன்ஸ் பேன்ட் போட்டுக் கொண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குக் கிளம்பினார்.
வீட்டை விட்டுக் கிளம்பி அரை கிலோமீ்ட்டர் தூரம் கூட போயிருக்க மாட்டார். அவரது செல்பேசியில் மியாவ்.. மியாவ்… என கத்தியது. எடுத்துப் பார்த்தால் மோடி….! எங்கே போறீங்க சார்..என்று கேட்டாராம் மோடி.
அதற்கு அமைச்சர் வெளிநாடு என்றாராம். போறது சரி. அது என்ன ஜீன்ஸ் போட்டுட்டு என்று கடிந்து கொண்டாராம் மோடி. அரசு ஊழியராக இருப்பவர் இப்படி ஜீன்ஸ் போட்டுப் போனால் மக்கள் என்ன நினைப்பாங்க என்று கேட்டாராம் மோடி. பிறகு செல்பேசி அழைப்பை துணடுத்து விட்டாராம்.
குழம்பிப் போன அமைச்சர் வண்டியை வீட்டுக்குத் திருப்பச் சொன்னார். உள்ளே போய் ஜீன்ஸைக் கழற்றிப் போட்ட அவர் வழக்கமான பைஜாமா – குர்தாவுக்கு மாறி பிறகு ஜம்மென்று கிளம்பிப் போனாராம். ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலயே.. மோடியிடம் குப்பை கொட்டுவது என ஒரு சில அமைச்சர்கள் புலம்பினார்களாம்.