பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 22 – எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களில் 20 பேரின் சடலங்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் இரண்டு மலேசியர்களின் சடலங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் கொண்டு வரப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்தார்.
இன்று நிர்வாணா நினைவு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய லியாவ், “இரண்டாவது குழு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) வருகின்றது. அதில் மூன்று சடலங்கள் கொண்டு வரப்படலாம். நெதர்லாந்து அதிகாரிகளின் அனுமதிக்காக மலேசிய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த முழு விபரம் சனிக்கிழமை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், இரண்டு மலேசியர்களின் சடலங்கள் அனுப்புவதற்கு தயாராக உள்ளது என்றும், மூன்றாவதாக ஒரு மலேசியரின் சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் லியாவ் தெரிவித்தார்.