Home நாடு “காலிட்டை விட என் தாயார் சிறந்த மந்திரி பெசாராக செயல்படுவார்” – நுருல் இசா ஆதரவு

“காலிட்டை விட என் தாயார் சிறந்த மந்திரி பெசாராக செயல்படுவார்” – நுருல் இசா ஆதரவு

827
0
SHARE
Ad

wan-azizah-nurul-izzah-2011-4-5-2-10-9-300x202கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் சிக்கலைத் தீர்ப்பதற்காக தனது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு, சிலாங்கூர் சுல்தான் நாடு திரும்பியிருக்கும் வேளையில், பக்காத்தான் ராயாட் கூட்டணி சமர்ப்பித்துள்ள மந்திரி பெசார் வேட்பாளரான வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு அவரது மகளும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நூருல் இசா ஆதரவு தெரிவித்துள்ளார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல், தனது தாயாரின் அக்கறை காட்டி அரவணைக்கும் தன்மை, பிரச்சனைகளை காது கொடுத்து கேட்கும் பொறுமை ஆகிய காரணங்களால் நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராகிமை விட சிறந்த மந்திரி பெசாராக செயல்படுவார் எனக் கூறியுள்ளார்.

“எல்லா தலைவர்களும் மற்றவர் மீது அக்கறையும் கவனிப்பும் காட்ட வேண்டும். இது எல்லாத் தலைவர்களுக்கும் இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்பாகும்” என்றும் நுருல் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஒரு பெண்மணி மந்திரி பெசாராக நியமனம் பெறக் கூடாது என முனைந்துள்ள பாஸ் கட்சி ஒருபுறம் இருக்க, பிகேஆர் கட்சியில் உள்ள மகளிர் தலைவிகள் வான் அசிசாவுக்கு ஆதரவாக அறிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

தனது தந்தை 1999இல் சிறையில் தள்ளப்பட்டபோது, தனது தாயாருக்கு உதவியாக தான் செயல்பட்டதாகவும், அந்த கணங்கள் எனது வாழ்க்கையின் சிரமமான கால கட்டங்கள் என்றும் நுருல் நினைவு கூர்ந்துள்ளார்.

“பிகேஆர் கட்சியின் தலைவியாக செயல்பட்டுக் கொண்டே தந்தை அருகில் இல்லாத ஆறு குழந்தைகளுக்கு ஒரு தாயாரின் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றியவர் அவர்” என்றும் நுருல் தனது தாயாருக்கு புகழாரம் சூட்டிய நுருல் சிலாங்கூர் மக்களின் குறைகளைத் தீர்க்கும் ஆற்றலைத் தனது தாயார் கொண்டுள்ளார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற பிகேஆர் மகளிர் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போது நுருல் மேற்கண்ட தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இருப்பினும், யார் அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக வருவது என்ற முடிவை பக்காத்தான் ராயாட் தலைவர்களே எடுப்பார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.