Home அவசியம் படிக்க வேண்டியவை அரசியல் பார்வை : பிகேஆர் கட்சித் தேர்தலில் சுரேந்திரன் தோல்வி ஏன்?

அரசியல் பார்வை : பிகேஆர் கட்சித் தேர்தலில் சுரேந்திரன் தோல்வி ஏன்?

830
0
SHARE
Ad

n-surendranகோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – நடந்து முடிந்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், நடப்பு உதவித் தலைவர் என்.சுரேந்திரனின் தோல்வி கட்சியிலும் இந்திய சமுதாயத்திலும் ஆச்சரிய அலைகளைப் பரவச் செய்திருக்கின்றது.

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேந்திரன் அன்வாருக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளில் பிரதிநிதிக்கும் குழுவில் எப்போதும் முன்னின்று செயல்படும் வழக்கறிஞராவார். மனித உரிமை விவகாரங்களிலும், சமூக விவகாரங்களிலும் தீவிரம் காட்டுபவர்.

இருப்பினும், நல்ல தலைமைத்துவ பண்புகள் இருந்தும், கட்சியின் முதுகெலும்பான அன்வார் இப்ராகின் நெருக்கமும் அரவணைப்பும் கிடைத்திருந்தும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக அவர் வெல்ல முடியாத சூழல் உருவாகியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதற்கு முக்கிய காரணம், பிகேஆர் கட்சியின் இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே உதவித் தலைவர் வேட்பாளராக ஒருவரை நிறுத்தத் தவறுவதுதான்!

அவர்களுக்குள்ளாகவே , யார் பெரியவன் என்று அடித்துக் கொள்வதால்தான் இந்த நிலைமை.

tian-chuaமாறாக, பிகேஆர் கட்சியில் உள்ள சீனப் பிரிவினர், ஒரு மனதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவுக்கு (படம்) ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர். அவர்களுக்குள், கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், உதவித் தலைவர் தேர்தலில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதில்லை. ஒரே வேட்பாளரை ஆதரிக்கின்றனர்.

அதனால்தான், தியான் சுவா பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவராக வெல்ல முடிகின்றது.

2010ஆம் ஆண்டிலும் இதே நிலைமை

இதே நிலைமை கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலிலும் நிகழ்ந்தது. அப்போது சேவியர் ஜெயகுமார், சிவராசா உள்ளிட்ட ஐந்து முக்கிய இந்தியத் தலைவர்கள் தேசிய உதவித் தலைவர் தேர்தலில் குதித்தனர். ஆனால் அனைவரும் தோல்வியடைந்தனர்.

anwar-ibrahim_pkr-300x199அதே வேளையில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒரு தவறைச் செய்தார்.

தனக்கிருந்த நியமன அதிகாரங்களின்படி இந்தியர் சார்பாக போட்டியிட்டு தோல்வி கண்ட 5 இந்தியத் தலைவர்களில் ஒருவரை அன்வார் 2010இல் உதவித் தலைவராக நியமித்திருக்கலாம்.

ஆனால், அன்வாரோ, ஜனநாயக முறைப்படி போட்டியிட்டுத் தோல்வி கண்ட 5 பேரையும் விட்டுவிட்டு, போட்டியே போடாத சுரேந்திரனை உதவித் தலைவராக நியமித்தார்.

அப்போதுதான், சுரேந்திரனை பிகேஆர் கட்சியின் இந்தியர் முகமாக முன் நிறுத்த அன்வார் விரும்புகின்றார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

அதே சமயம் சுரேந்திரனுக்கு எதிரான அதிருப்தி அலைகளும் அப்போதிருந்தே பரவத் தொடங்கின.

போட்டியிட்டு தோல்வியுற்ற இந்தியத் தலைவர்களில் ஒருவரை நியமிப்பதை விட்டுவிட்டு, போட்டியே போடாத சுரேந்திரனை உதவித் தலைவராக நியமித்ததன் மூலம், அன்வார் 2010ஆம் ஆண்டிலேயே சுரேந்திரனுக்கு எதிரான அதிருப்திக்கு வித்திட்டார்.

பின்னர், பிகேஆர் கட்சியில் குறிப்பிடத்தக்க இந்தியத் தலைவராகத் திகழ்ந்த கோபாலகிருஷ்ணன், அன்வாருடன் ஏற்பட்ட பிணக்குகளின் காரணமாக கட்சியிலிருந்து வெளியேற, அவரது பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு சுரேந்திரனை 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் நிறுத்தினார்.

சுரேந்திரனும் நாடாளுமன்ற உறுப்பினராக வாகை சூடினார். இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் அவரால் வெல்ல முடியவில்லை.

அன்வார் மீண்டும் அவரை கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

பிகேஆர் கட்சியின் இந்தியத் தலைவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தனித்தனி குழுவாகச் செயல்படுவதால்தான் யாராலும் தனிப் பெரும் தலைவராக அங்கு உருவெடுக்க முடியவில்லை.

பிகேஆர் கட்சியில் இல்லாத தமிழ் முகம்

Sivarasaபிகேஆர் கட்சியில் முன்னணி அரசியல்வாதிகளாக திகழும் இந்தியத் தலைவர்கள் யாரும் நன்கு தமிழ் அறிந்தவர்களாகவோ, தமிழ்ப் பள்ளிகளில் இருந்து வந்தவர்களாகவோ இல்லை என்பது ஒரு முக்கிய குறையாகும்.

அப்படியே ஓரிருவர் இருந்தாலும், அவர்களுக்கு பிகேஆர் கட்சியின் தலைமைத்துவம் முக்கியத்துவம் தருவதில்லை. முன்னணியில் நிறுத்துவதில்லை.

இன்றைக்கு முன்னணி இந்தியத் தலைவர்களாக பிகேஆர் கட்சியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுரேந்திரன், சிவராசா (படம்) போன்றவர்கள், இந்திய சமுதாயத்தால் மதிக்கப்படுகின்றார்கள். சிறந்த அறிவாற்றலையும், சிறந்த வழக்கறிஞர்களாக செயல்படும் திறனையும் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், தமிழில் மேடைப் பேச்சுத் திறன் இல்லாததாலும், தமிழை முறையாகப் படிக்காத காரணத்தாலும் , தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய சமுதாயத்தில் அவர்களால் ஊடுருவ முடியவில்லை. சாதாரண, நடுத்தர மக்களைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை.

MIC-Logo-Sliderமாறாக, மஇகா தலைவர்கள் நல்ல மேடைப் பேச்சுத் திறனைக் கொண்டிருப்பதாலும் – தமிழ்ப் பள்ளிகள், தமிழ் இயக்கங்கள் என தமிழை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாலும் – தமிழ்ப் பத்திரிக்கைகளோடு அணுக்கமான தொடர்புகளுடன் செயல்படுவதாலும் – மிக சுலபமாக பெரும்பான்மை தமிழர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அரசியல் ரீதியாக பணியாற்ற அவர்களால் முடிகின்றது.

எனவே, பிகேஆர் கட்சி இந்திய சமுதாயத்தினரின் வாக்குகளை அடைய வேண்டுமானால், நல்ல தமிழறிந்த, தமிழில் சிறந்த மேடைப் பேச்சுத் திறன் கொண்ட, அதே வேளையில் கல்வித் தகுதிகள் போன்ற அம்சங்களிலும் முழுமை பெற்ற இந்தியத் தலைவர் ஒருவரை அடையாளம் கண்டு முன்னணியில் நிறுத்த வேண்டும்.

அதே நேரத்தில், அத்தகைய தலைவரின் பின்னால், பிகேஆர் கட்சியிலுள்ள இந்திய அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து திரண்டு நிற்க வேண்டும். ஆதரவு தரவேண்டும்.

கட்சி தலைமைத்துவத்தின் அரவணைப்பு, அடிமட்ட இந்திய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் ஆதரவு, என இரண்டு அம்சங்களும் ஒருங்கே ஒன்றிணந்த ஒரு தலைவர் பிகேஆர் கட்சியில் உருவாகும்போது – அல்லது உருவாக்கப்படும்போதுதான்,

அத்தகையவர் கட்சியின் தேசிய உதவித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியமும் நிகழும்.

இல்லாவிட்டால், இந்த ஆண்டு நிகழ்ந்த கட்சித் தேர்தல் முடிவுகள்தான் இனி எப்போதும் தொடர்கதையாக நீடிக்கும்.

பிகேஆர் கட்சியின் பல இன அரசியல் சித்தாந்தம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக தோல்வியில் முடியும்.

-இரா.முத்தரசன்