ஆகஸ்ட் 25 – மாபெரும் தமிழறிஞர் ‘இறையருட்கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று இரு வாரங்கள் ஆகிவிட்டன.
இருப்பினும், அன்னாரின் இனிய, மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பல பேருடைய மனங்களில் அவரைக் குறித்த எண்ணங்கள் இன்னும் சுற்றிச் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன.
அத்தகைய எண்ணங்களின் வெளிப்பாட்டை அண்மையில் குளுவாங்கில் நடந்த அன்னாரின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் காணவும், கேட்கவும் முடிந்தது.
அந்த எண்ணங்களின் வெளிப்பாட்டின் வழியாக அன்னாரின் சில மறுபக்கங்களையும், அவருடன் பழகியவரின் அனுபவங்களின் வழியாக, அவரது சில பண்புகளையும், குணநலன்களையும், அறியவும் முடிந்தது.
ஜோகூர் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் கழகம் ஏற்பாட்டில் 22.08.2014 (வெள்ளிக்கிழமை ) , குளுவாங்கில் இறையருட் கவிஞரின் நினைவஞ்சலிக் கூட்டம் காலை 10.30 மணிக்கு , இந்து சங்க அறப்பணி மாளிகையில் நடைபெற்றது.
கழகத் தலைவர் ஆசிரியர் கந்தசாமி தலைமையுரை ஆற்றினார்.
முத்து நெடுமாறனின் உரை
நாடறிந்த தமிழ்க் கணிஞர் திரு. முத்து நெடுமாறன் சிறப்பு வருகை புரிந்து ஐயா திரு சீனி நைனா முகம்மது அவர்களைப் பற்றி உணர்வுரை நிகழ்த்தினார்.
இறையருட் கவிஞரைப் பற்றிய அருந்தகவல்களை திரு. முத்து, மூன்று கோணங்களில் எடுத்துரைத்த பாங்கு இரங்கற் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது.
முன்னதாக அவர் “ இதுதான் நான் கலந்து கொள்கின்ற முதல் இரங்கல் கூட்டம். இரங்கல் கூட்டத்தில் என்ன பேசுவார்கள் என்று கூடத் தெரியாது” என்று சொன்னாலும் ஒரு கணிஞன் என்ற வகையிலும் ஒரு தொழிநுட்பவாதி என்கிற முறையிலும் கவிஞருடன் நிறைய மொழி தொடர்பான நுணுக்கத் தகவல்களைப் பல மணி நேரம் கலந்துரையாடியதையும், அவற்றை இங்கு வந்திருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லியாக வேண்டும் எனும் வேட்கையாலும் அன்னாரின் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறினார்.
அவரது உரையின் சில பகுதிகள் பின்வருமாறு:-
“பெரும்பாலும் ஐயா அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் தமிழ் இலக்கியவாதிகள், தமிழாசிரியர்கள். நான் ஒர் ஆர்வலராக அவரைச் சுற்றியிருந்தேன். ஐயா ஒரு தேன்கூடு என்று சொன்னால், நான் ஒரு தேனீ ”
“ அவருடைய இழப்பு ஈடுசெய்ய இயலாதது. இருந்தாலும் அவருடைய பணியும் தொண்டும் தொடரவேண்டும். அவர் வித்திட்ட விதை வேரூன்ற வேண்டும். அந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம், எனக்கு எப்போது இருந்ததுண்டு”
மேலும், ஐயா சீனி நைனா முகம்மது அவர்களைப் பற்றி மூன்று கோணங்களில் அவரோடு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.
முதலாவது கோணம்: அவர் ஒரு பயனர்.
“தாம் உருவாக்கிய செயலியின் முதல் பயனர்களில் கவிஞர் சீனி ஐயாவும் ஒருவர் ஆவார். தனிப்பட்ட முறையில் மூன்று முக்கிய பயனர்களை முத்து நெடுமாறன் நினைவு கூர்ந்தார்.
மூவரும் பினாங்கைச் சார்ந்தவர்கள். முதலாவது பேராசிரியர் திரு.ரெ.கார்த்திகேசு, இரண்டாவது, காலஞ்சென்ற கவிஞர் கரு.திருவரசு. மூன்றாவது சீனி ஐயா.
“ சீனி ஐயாவுக்கு தமிழ் மூச்சு மட்டுமல்ல ;அது அவருடைய டிஎன்ஏ-வாகவும் (DNA) இருந்தது. தமிழ் என்று சொன்னாலே அவருடைய DNA வரிசை கட்டி நிற்கும்! அவருடைய பேச்சு, அவருடைய மூச்சு, அவருடைய சிந்தனை எல்லாமே தமிழ் என்று தான் இருக்கும்”
“ தமிழைப்பற்றி அறிவியல் கூறுகளைக் கூறும்போதும், அறிவியல் தொடர்பான செய்திகளை அவருடன் பகிர்ந்துகொள்ளும் போதும் அவருக்கு ஏற்படுகின்ற ஆர்வம் அளவிட முடியாது.” என்றும் முத்து நெடுமாறன் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாவது கோணம்: அவர் ஒர் ஆசிரியர்; நண்பர்.
“அவர் எனக்கு ஒர் ஆசிரியர்; ஒரு நல்ல நண்பர். தமிழ் மட்டுமல்லாது பல விசயங்களை அவருடன் கேட்டுத் தெளிவடைந்திருக்கிறேன்.” என்றும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.
“பெரும்பாலும் இறப்பு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனெனில், நாம் மறுபடியும் பிறவிகளை எடுக்கத்தான் போகிறோம், மறுபடியும் சந்திக்கத்தானே போகிறோம்….என்கிற நம்பிக்கை மட்டுமல்ல புரிந்துணர்வும் எனக்கு இருக்கிறது. அதனால் ஏன் அழவேண்டும், ஏன் வருத்தப்படவேண்டும்? அவருடைய தொண்டை நாம் போற்றுவோம் அடுத்தடுத்த நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்று இருந்தேன்.”
“ஐயாவுடைய இறப்புக்கு முன்பு, என்னைப் பாதித்தது, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் மறைவு. 2011இல், ஐயா அவர்கள் திறன்பேசி வைத்திராத காலகட்டம். வெறும் 9 விசையைக் கொண்ட சாதாரண நோக்கியா கைப்பேசியைக் கொண்டே எனக்குத் தமிழிலேயே எழுத்துகளைக் கோர்த்து குறுந்தகவல் அனுப்பினார். அவ்வளவு ஆறுதலாக இருந்தது. அதில் அவர் சொன்ன செய்திதான் மிக முக்கியம். இப்போதுகூட ஐயா இறப்புக்குக்கூட, அன்று அவர் அனுப்பிய செய்திதான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது”.
அவரது அந்த செய்தி இதுதான்:
“ நமக்கெல்லாம் சில கடமைகள் கொடுக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பப் பட்டிருக்கிறோம். இவ்வுடலெடுத்து உலகிற்கு வந்ததே… அந்தக் கடமைகளைச் சரிவரச் செய்யத்தான். வாழ்கின்ற வரைக்கும் அந்தக் கடமைகளைச் செய்யவேண்டும். நேரம் வந்ததென்றால், முடிந்து விட்டதென்று புறப்பட வேண்டும் “
என்று சீனி ஐயா அக்குறுந்தகவலில் அனுப்பியிருந்ததை முத்து நெடுமாறன் நினைவு கூர்ந்தார்.
“ அடிக்கடி என்னிடம் அவர் சொல்கின்ற விசயம் என்னவென்றால், அவர் தமிழ்த்தொண்டு செய்வதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறார்…என்பதாகும். அவரிடம் எனக்கு அன்பும் பன்மடங்கு பெருகியதற்குக் காரணமும் அதுதான். ஏனெனில் என்னுடைய உணர்வும் அதுதான்!”
மூன்றாவது கோணம்: அவர் ஒரு தகவுரைஞர்
“அவர் எனக்கு மிகப்பெரிய தகவுரைஞர். நான் தைரியமாய் உலகரங்கில் பேசுவதற்கு தமிழ் எனக்கு உறுதுணையாய் இருந்தது. இருப்பினும் தமிழில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலைச்சொற்களுக்கு ஐயாவை நான் உதவிக்காக பலமுறை நாடியுள்ளேன். பலமுறை உள்நாட்டிலும் அல்லது வெளிநாட்டிலும் இருந்தாலும் ஏதாவது தமிழ் தொடர்பான சந்தேகம் என்று வந்தால் ஐயாவை அழைத்துப் பேசுவேன். எப்போது கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்லவும் விளக்கம் கொடுக்கவும் ஐயா தயாராய் இருப்பார்“
“ஒரு முறை நண்பர் ஒருவர் காணொளி ஒன்று அனுப்பியிருந்தார். அதில் ஐயாவே பாடுகிறார் …”தமிழன்றி தரவொன்றும் இல்லை…நான் தமிழோடு புவிவந்தப் பிள்ளை…” என்று”
“ஐயா சீனி நைனா முகம்மது, ஒரு நவீன பாரதியார். ஒரு தீர்க்கதரிசியாய் தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டாற்றியவர்” என்றும் முத்து நெடுமாறன் புகழாரம் சூட்டினார்.
மற்ற பிரமுகர்களின் உரை
இறையருட் கவிஞரின் இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் மலேசியப் பாவலர் மன்றத்தினர் நால்வர் கலந்து கொண்டனர்.
ஜோகூர் மாநிலப் பாவலர் மன்றத் தலைவர், ஏ.தேவராஜா பாவலர்கள், திரு.ஏ.ஆர்.சுப்பிரமணியம் (தலைவர்), திரு.சீராகி, திரு.மு.சு.கார்த்திக், திரு. ஜோசப் செபஸ்தியன் ஆகியோர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவாக இரங்கற்பா பாடினர்.
ஜோகூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், கவிஞர் திரு.சோ.வாஞ்சிநாதன் ஐயாவின் பெருமைகளை எடுத்துரைத்து கவிதை பாடினார்.
ஆசிரியர் திரு.வேதநாயகம் அவர்களின் காணொளிப்படைப்பு, ஆசிரியர் திரு. இல.வாசுதேவன் தயாரிப்பில் ஐயாவைப் பற்றி ஜோகூர் பாரு வட்டாரத் தமிழாசிரியர்கள் வழங்கிய பேட்டி – ஆகியவற்றோடு வருகை புரிந்தோர் அனைவரையும் கவர்ந்தது.
இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், கவிஞர்கள் இறையருட் கவிஞரைப்பற்றி தங்கள் சிந்தனைகளை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக, கவிஞர் சீராகி, தான் சீனி ஐயாவின் இளமைக்கால நண்பன் என்று கூறி. அவருடன் சிறுவயது முதல் நெருங்கிப் பழகிய அனுபவங்களை தனது சிறப்பான உரையாலும், கவிதையாலும் எடுத்துரைத்தார்.
இரங்கல் கூட்டத்தைச் ஆசிரியர் கி.பா.மகேந்திரன் செம்மையாக வழி நடத்தினார்.
-இல.வாசுதேவன்
(பின்குறிப்பு: குளுவாங்கில் நடைபெற்ற இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மேற்கண்ட தகவல்களைத் தொகுத்து வழங்கிய இல.வாசுதேவனுக்கு செல்லியல் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்)