Home நாடு ஈப்போவில் பொது இடத்தில் அரை நிர்வாண படப்பிடிப்பு – மக்கள் அதிர்ச்சி

ஈப்போவில் பொது இடத்தில் அரை நிர்வாண படப்பிடிப்பு – மக்கள் அதிர்ச்சி

960
0
SHARE
Ad

ipohஈப்போ, ஆகஸ்ட் 25 – பேராக் மாநிலம் ஈப்போவிலுள்ள ஜாலான் சுல்தான் யூசோப் சாலையில், திருமணத்திற்கு தயாரான ஒரு சீன தம்பதி எடுத்துக் கொண்ட (pre-weddingphotographs) படங்கள் தற்போது நட்பு ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கி வருகின்றது.

திருமண படங்கள் என்பது சீனர்களில் மத்தியில் சகஜம் தானே? ஏன் இந்தியர்கள், மலாய்காரர்கள் கூட திருமணப் படங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்களே? இது ஒரு பெரிய விசயமா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் இந்த கதையே வேறு. போட்டிகள் நிறைந்த இன்றைய நவீன உலகில் ஏதாவது ஒன்றை புதுமையாகவும், வித்தியாசமாகவும் செய்து தான் மக்களை தன் பக்கம் திருப்ப வேண்டிய நிலையில் அனைவரும் இருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

நட்பு ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக்கில் கூட, ஒருவரின் இடுகைக்கோ அல்லது புகைப்படத்திற்கோ எத்தனை விருப்பங்கள் (Likes) கிடைக்கிறதோ அதை வைத்து தான் ஒருவரின் அந்தஸ்தை முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்கு அறியப்பட்ட சினிமா பிரபலங்களில் இருந்து சாதாரண பேஸ்புக் பயனர் வரை இந்த லைக் மோகத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். வியாபார ரீதியில் கூறினால் இதற்கு பெயர் மார்க்கெட்டிங் (வியாபார தந்திரம்).

இப்படிப்பட்ட நிலையில், புகைப்பட கலைஞர்களின் நிலையை கேட்கவா வேண்டும்? நாடெங்கிலும் ஒவ்வொரு வீதியிலும் திருமணம் படங்கள் எடுக்கும் பிரத்தியேக கடைகள் ஆறேழு உள்ளன.

இது தவிர, பேஸ்புக்கில் ஒவ்வொரு புகைப்பட நிறுவனமும் தங்களது பக்கங்களை திறந்து தினமும் புதிது புதிதாக படங்களை பதிவேற்றம் செய்து மக்களை ஈர்த்து வருகின்றார்கள்.

Ipoh 2அரை நிர்வாண படங்கள்

இந்த போட்டிகளையெல்லாம் சமாளிக்க ஈப்போவைச் சேர்ந்த ஒரு திருமணப் படங்கள் எடுக்கும் நிறுவனம் புதிய யுத்தியை கையாண்டிருக்கின்றது.

அதாவது, மாப்பிள்ளை கால்சட்டை மட்டுமே அணிந்திருக்கிறார். மேலாடை இல்லை.  மணப்பெண்ணோ உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருக்கிறார். இவர்கள் இருவரையும் பட்டப் பகலில், மக்கள் அதிகம் கூடும் பொது இடத்தில் வைத்து படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறது அந்த நிறுவனம்.

இந்த காட்சிகளை அந்த வழியே போவோர், வருவோரெல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டு, தங்களது அதிநவீன கையடக்கக் கருவிகளின் வழியாக புகைப்படங்களையும், காணொளிகளையும் எடுத்து இணையத்தில் நேற்று பரப்பிவிட்டார்கள்.

இந்த படங்கள் தற்போது நட்பு ஊடகங்களில் அதிகமான விருப்பங்களையும், கருத்துக்களைப் பெற்று தற்போது செய்தியாகியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் கூ என்பவர் கூறுகையில், “அந்த இருவரும் நிஜ தம்பதிகள் அல்ல. அவர்கள் இருவரும் நடிகர்கள் தான். மாதிரி திருமண படங்கள் எடுப்பதற்காக தான் இதை செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த படங்களை எடுத்ததற்காக சட்டரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் கூ தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இது சட்டத்திற்கு எதிரான செயல் அல்ல என்றும் கூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“மக்கள் அரை குறை ஆடை அணிந்த பெண்களை வீதியில் இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த விசயத்தை பெரிது படுத்துகிறார்கள். இது புகார் அளிப்பது அவர்களது உரிமை” என்றும் கூ தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக கூ புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பேராக் காவல்துறைத் தலைவர் மற்றும் துணை ஆணையர் டத்தோ அகிரில் சனி அப்துல்லா சனி, இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.