ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 26 – ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மீது நாளை காலை பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றம் சுமத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து ஜசெக தேசிய சட்ட செயலகத்தின் தலைவர் மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ கூறுகையில், இந்த வழக்கில் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகும் படி இன்று காலை ராயருக்கு காவல்துறையிடமிருந்து தகவல் வந்ததாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்ட அதே விவகாரத்திற்காக தான் தற்போது வழக்கு தொடரப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாகவும் கோபிந்த் சிங் கூறினார்.
கடந்த மே மாதம் புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலின் போது, ஆயர் ஈத்தாமில் ஜசெகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ராயர், அம்னோ கட்சியை ‘செலாக்கா அம்னோ’ என்று விமர்சித்ததற்காக, ராயருக்கு எதிராக 14 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
அவரது கருத்து மலாய் உரிமை அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்டுத்தியது. ராயருக்கு எதிராக பல்வேறு இஸ்லாம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, ராயர் வீட்டின் முன்பாக உரிக்கப்பட்ட மாட்டின் தலை போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ராயர் பினாங்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அப்போது அவர் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், ராயரின் மீதான வழக்கு, கடந்த ஜூன் 19 -ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.