ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 27 – அம்னோ தலைவர்களை ‘செலாக்கா’ என்று கூறிய வழக்கில் ஜசெக கட்சியின் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மீது தேச நிந்தனை சட்டப்பின் கீழ் இரண்டு குற்றங்கள் இன்று சுமத்தப்பட்டது.
இன்று காலை பினாங்கு நீதிமன்றத்தில் ஆஜரான அவர் மீது, கடந்த மே மாதம் 20 -ம் தேதி, மாநில சட்டமன்றத்தில், இவ்வாறு அவதூறான வார்த்தைகளை வெளியிட்டார் என்று கூறி சட்டப்பிரிவு 4 (1) கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
அதேவேளையில், இதே போன்றதொரு அவதூறான பேச்சை, புக்கிட் கெலுக்கோர் இடைத்தேர்தலின் போது நடைபெற்ற பிரச்சாரத்திலும் அவர் பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் அக்டோபர் 17 – ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
இதனிடையே, ராயருக்கு ஆதரவாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பிகேஆர் அப்துல் மாலிக் காசிம், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஜெயபாலன் மற்றும் ஜசெக கட்சியைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.