கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், இணையம் மூலமாக நிறுவனங்களுக்கு விளம்பரங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்த துறையின் முன்னோடியான கூகுளை மிஞ்சுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இணையம் மூலம் உலக அளவில் நடைபெறும் வர்த்தகம் பல ஆயிரம் பில்லியன்களைத் தாண்டும். அத்தகைய வர்த்தகத்தில் மிக முக்கியத் துறை விளம்பரமாகும்.
இணையம் மூலமாக செய்யப்படும் விளம்பரங்கள் பயனர்களை மிக எளிதாகச் சென்றடைகின்றன. அதனால் இந்தத் துறை பெருவாரியான வளங்களைக் கொடுத்து வருகின்றது.
இதில் முக்கிய பங்காற்றும் கூகுள் ‘ஆட்வேர்ட்ஸ்‘ (AdWords) என்ற இணைய சேவையை பயனர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் பக்கத்தில் பயனர்கள் ஆப்பிள் என தட்டச்சு செய்தால் ஆப்பிள் குறித்த அனைத்து விளம்பரங்களும் பயனர்களின் திரையில் தோன்றும்.
இதே போன்ற ஒரு சேவையை பல மில்லியன்கள் செலவில் அமேசான் நிறுவனம் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகின்றது. கூகுளின் சேவையை விட பல நவீன மற்றும் தனித்தன்மை கொண்ட அம்சங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த இணைய சேவையின் மூலம், அமெசான் கூகுளை மிஞ்சிவிடும் என அந்நிறுவன வட்டாரங்களால் கூறப்படுகின்றது.