நியூயார்க், ஆகஸ்ட் 29 – எதிர்பார்த்ததை விட எபோலா பாதிப்பு மோசமான நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குநர் டாம் ப்ரீடன் கூறியதாவது:-எபோலா வைரஸ் தாக்கம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அது நான் அச்சம் அடைந்ததை விட மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மற்ற நாடுகளுக்கும் பரவுகிற ஆபத்தான நிலையும் அதிகமாக காணப்படுகிறது.
லைபீரியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு எவ்வளவு விரைவாக உதவ உலக நாடுகள் முன் வருகிறதோ அந்த அளவிற்கு நாம் பாதுகாப்பாக இருப்போம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸ் நோய்க்கு எதிராக சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.