ஆகஸ்ட் 29 – தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் கோபிநாத் நடத்தும் பிரபலமான விவாதத் தொடர் “நீயா நானா”வில் அண்மையில், ஒரு சுவையான விவாதம்.
தற்போது தனியார் மருத்துவமனைகள் வணிக ரீதியாக நடத்தப்படுகின்றன என்றும், வேலை செய்யும் மருத்துவர்களுக்கு “நீங்கள் இவ்வளவு வருமானம் வரும் அளவுக்கு இயந்திரங்கள் மூலமான பரிசோதனைகளும், மற்ற சிகிச்சைகளும் மேற்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தங்கள் விதிக்கப்படும்” என்றும் ஒரு சக மருத்துவரே மனம் நொந்து கூறியதை அந்த நிகழ்ச்சியில் பலர் பார்த்திருக்கக் கூடும்.
அந்த ஒற்றைவரிக் கதைக்களத்தை எடுத்துக் கொண்டு, மர்மமும் திகிலும் நிறைந்த சஸ்பென்ஸ் முடிச்சுகளை வைத்துக் கொண்டு, அடுத்த என்ன நடக்கும், இவையெல்லாம் ஏன் நடக்கின்றது என படம் பார்ப்பவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு திரைக்கதையை உருவாக்கி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டணிக்கு வெற்றிக் கொடியை நாட்டித் தந்திருக்கின்றார் புதிய இயக்குநர் என்.வி.நிர்மல்குமார்.
ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ஆச்சரிய நடிப்பில் வந்து எதிர்பாராத வெற்றியைப் பெற்ற ‘நான்’ படத்தின் தொடர்ச்சிதான் சலீம் என்றாலும், அந்தப் படத்தின் சாயலும்,‘நான்’ கதையின் தொடர்ச்சியும் எந்த இடத்திலும் வராதபடி கதையை அமைத்திருக்கின்றார்கள்.
பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக பணியாற்றியிருக்கின்ற தனது அனுபவத்தை, தனது சொந்த திறமையுடன் கலந்து திரையில் செமர்த்தியாகக் காட்டியிருக்கின்றார் நிர்மல்குமார்.
வழக்கமான தமிழ்ப்பட கதாநாயகனாக விஜய் ஆண்டனியைக் காட்டாமல், இயல்பான, அமைதியான, ஒரு மருத்துவராகவே அவரைக் காட்டியிருக்கும் யதார்த்தத்தைப் பாராட்டலாம்.
அதே வேளையில், படத்தின் பின்பாதியில் சலீம் என்ற கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனம் நிறைந்த நடவடிக்கைகள் திரையரங்கில் நிச்சயம் கைத்தட்டலையும், விசிலையும் கிளப்பும்.
குறிப்பாக, இறுதிக் காட்சியில் நம்மையும் அறியாமல் எழுந்து நின்று விஜய் ஆண்டணியையும், இயக்குநரையும் நமக்கு பாராட்டத் தோன்றுகின்றது.
அதுவே படத்தின் வெற்றியின் அடையாளமும் கூட!
வலுவான கதை – திரைக்கதை
மிகுந்த கவனத்துடனும், புத்திசாலித்தனம் கலந்தும் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
‘நான்’ படத்தில் கல்வியில் முன்னேறுவதற்காக,‘சலீம்’ என்ற பெயரில் முஸ்லீமாக நடித்து, தன் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள கொலையும் செய்யத் துணியும் கதாபாத்திரம், அதே பெயரில் இந்த படத்திலும் தொடர்கின்றது. ஆனால்,‘நான்’ படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் இது தெரியுமே தவிர, அந்தப் படத்தின் சாயலோ, தொடர்போ இல்லாமல் சலீமின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கின்றது.
மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சலீம், தனது தொழிலுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கின்றார்.
ஆனால், அதனால் அவருக்குப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. படத்தின் முதல் பாதியில் தனியார் மருத்துவமனையில் இலாபம் சம்பாதிப்பதற்காக மருத்துவர்கள் நிகழ்த்தும் தகாத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார்கள். தனியார் மருத்துவமனைகள் வழக்கு போடாமல் இருந்தால் சரி!
தனியார் மருத்துவமனை உரிமையாளரின் போக்குக்கு ஒத்துழைக்காத சலீமுக்கு ஒரு கட்டத்தில் வேலையே பறிபோகின்றது.
இந்த சம்பவங்களின் ஊடே நிகழும் ஒரு பெண்ணின் மீதான கற்பழிப்புடன் கூடிய தாக்குதலின் மர்மப் பின்னணிகள் ஒரு புறம்.
இன்னொரு புறத்தில் சலீம் கல்யாணம் பண்ணப் போகும் கதாநாயகியின் எதற்கெடுத்தாலும் ஆத்திரப்படும், அவசரப்படும் குணாதிசயம் – அதனால் ஏற்படும் பிணக்குகள், திருமணம் தடைபடுதல் போன்ற சம்பவங்கள்.
இவையெல்லாம் சலீமின் வாழ்க்கையைப் பாதித்து அவனை விரக்தி – வெறுப்பு நிலைக்கு கொண்டு செல்கின்றன.
அந்த கட்டத்தில் அதிரடியாக அவன் உருமாறி எல்லாவற்றையும் எதிர்த்து நிற்பதோடு, அதிரடியாக நாட்டின் அமைச்சரின் மகனை கடத்தி ஒரு தங்கும் விடுதியில் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொள்கின்றான்.
ஏன் சலீம் அமைச்சர் மகனை பிணையாகப் பிடித்து வைக்கின்றான் என்பது கட்டம் கட்டமாக நமக்கு விவரிக்கப்பட, இதற்கிடையில் சலீமை வேட்டையாடிப் பிடிக்கவும், பிணைக் கைதியான அமைச்சர் மகனை விடுவிக்கவும் காவல் துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அவர்களுக்கு சலீம் தண்ணி காட்டுவதுமாக படம் பரபரப்பாக நகர்கின்றது.
படத்தின் இறுதிக்காட்சி வரை பரபரப்பும் சஸ்பென்சும் தொடர்வது இயக்குநரின் திறமைக்கு மற்றொரு சான்று.
குறைகள் – நிறைகள்
ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் விஜய் ஆண்டனியின் நடிப்பு படக் கதைக்குப் பாந்தமாகப் பொருந்துகின்றது.
ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால், நமக்கே எரிச்சலூட்டும் அளவுக்கு அளவுக்கதிகமாக அமைதியின் சின்னமாக, சன்னமான குரலில் பேசிக் கொண்டு காட்சியளிக்கின்றார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகியே நொந்துபோய்,‘சந்தோஷமாக இருக்கிறேன் என்பதைக் கூட ஏன் சோகமாக சொல்லுகிறாய்’ என்ற தொனியில் கேட்கின்றார்.
இடைவேளைக்குப் பின்னர் ஒரு சில காட்சிகளில் சிங்கமாகப் பொங்கியெழுந்தாலும் பின்னர் மீண்டும் அளவுக்கதிகமாக அமைதியாகி விடுகின்றார்.
கொஞ்சம் கூட உணர்ச்சிகளைக் காட்டாமல், அமைச்சரின் மகனைக் கடத்தி வைத்துக் கொண்டு அவர் செயல்படுவது கொஞ்சம் இடிக்கின்றது.
யார் அந்தக் கதாநாயகி? அக்சா பர்டாசனி (படம்) என்பது பெயராம்! இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா மாதிரி வாட்டசாட்டமாக இருக்கின்றார். அவர் பண்ணும் அலம்பல்களுக்கு நமக்கே அவருக்கு ஓங்கி ஓர் அறை விட வேண்டும் என்று தோன்றுவது திரைக்கதை அமைப்பின் பலம்.
பின்னணி இசையில் பிய்த்து உதறியுள்ள விஜய் ஆண்டனி, பாடல்களில் ஏனோ கோட்டை விட்டு விட்டார். ஒன்றும் மனதில் பதியவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் அரை குறை ஆடையுடன் ஒரு கும்மென்ற நடிகை குத்தாட்டம் போடுவது தமிழ்ப்படங்களுக்கே உரித்தான சாபக்கேடு போலும். இதிலும் அப்படி ஒரு காட்சியை வைத்து, கொஞ்சம் சறுக்குகின்றார் இயக்குநர்.
நகைச்சுவை ஏதும் இல்லாததை இயக்குநர் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
படத்தில் அமைச்சரின் மகனை ஏன் சலீம் கடத்துகின்றார் என்பது நமக்கு சலீம் சொல்லாமலே புரிந்து விடுவது திரைக்கதையில் ஒரு சிறு ஓட்டைதான்.
இருப்பினும், படத்தின் இறுதிக்காட்சி வரை மர்ம முடிச்சுகளை, பரபரப்பை கொண்டு சென்றிருக்கும் சாமர்த்தியம் – தொய்வில்லாமல் நகரும் காட்சிகள் – படத்தின் கதையோடு நகரும் ஒளிப்பதிவு – இடையிடையே காட்டப்படும் கதாநாயகனின் புத்திசாலித்தனம் –
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ஒரு நல்ல தரமான படம் பார்த்த திருப்தியை நமக்கு ஏற்படுத்துகின்றான் சலீம்.
-இரா.முத்தரசன்