Home நாடு பேராக் மாநில மஇகா தலைமை: சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்க வேண்டும் – முருகையா வலியுறுத்து

பேராக் மாநில மஇகா தலைமை: சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்க வேண்டும் – முருகையா வலியுறுத்து

769
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர், ஆகஸ்ட். 30- பேராக் மாநில ம.இ.கா.விற்கு தலைமையேற்கும் பொறுப்பை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திடம் ம.இ.கா., தலைமை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா வலியுறுத்தி உள்ளார்.

முருகையாவும் பேராக் மாநிலத்தின் கிளைத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ம.இ.கா., தேசியத் துணைத் தலைவராக டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை ம.இ.கா.வைச் சேர்ந்த அனைவருமே நன்கறிவர் என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அண்மையில் பேராக் மாநில ம.இ.கா., மாநாட்டில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதன் முடிவில் அம்மாநிலத் தலைவர் டத்தோ ஆர்.கணேசன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பேரா மாநிலத் தலைமையை, தானே ஏற்பதாக ம.இ.கா. தேசியத் தலைவர் அறிவித்துள்ளார்” என்று சுட்டிக் காட்டியுள்ள முருகையா,

“மாநிலத் தலைமையை மாற்றுவது என தேசியத் தலைமை முடிவெடுத்த பின்னர், டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தின் பெயரைப் பரிசீலித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது நல்ல முடிவாக இருந்திருக்கும்,” எனவும் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தலைமைகளில் உதவித் தலைவர்கள்

Datuk Seri Dr S.Subramaniam APதற்போது பழனிவேல் சிலாங்கூர் ம.இ.கா. தலைவராகவும், உதவித் தலைவர் டத்தோ சரவணன் கூட்டரசுப் பிரதேச மாநில தலைவராகவும், டத்தோ பாலா ஜொகூர் மாநிலத் தலைவராகவும் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள முருகையா, நெகிரி மாநிலத்தில் டத்தோ சோதிநாதன் தலைவராக பொறுப்பேற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது ம.இ.கா.வின் முதல் நிலை தலைவர்களாக உள்ள அனைவருமே இவ்வாறு மாநிலப் பொறுப்புகளை தங்கள் வசம் வைத்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் எந்த மாநிலத்தின் தலைமைக்கும் பொறுப்பேற்கவில்லை. தற்போது தேசிய துணைத் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டு வரும் அவர், 2016க்குப் பிறகு தேசியத் தலைவராகவும் பொறுப்பேற்கப் போகிறார். எனவே, அவர் ஒரு மாநிலத்தின் தலைவராகவும் பதவி வகித்து, அதன் வழி பெறக்கூடிய அனுபவங்கள் மிக முக்கியமானதாகும். மாநிலத் தலைவர்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அவருக்கு அனுபவ ரீதியில் புரிபடும்” என்றும் முருகையா குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் சுமைதான் ஏற்படும் 

“எனவே இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பேரா மாநில ம.இ.கா., தலைமையை டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திடம் தேசியத் தலைமை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் அம்மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான பிரச்சினைகளுக்கு டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நல்ல தீர்வுகளைக் காண்பார் என நம்பலாம்,” என டத்தோ முருகையா கூறியுள்ளார்.

தற்போது தேசியத் தலைவர், சிலாங்கூர் ம.இ.கா. தலைவர், அமைச்சர் என டத்தோ பழனிவேல் ஏற்கெனவே மூன்று முக்கிய பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய நிலையில், பேரா மாநிலத் தலைமையையும் ஏற்பது டத்தோ பழனிவேலுக்கு நிச்சயமாக கூடுதல் சுமையை மட்டுமே தரும் எனத் தெரிவித்துள்ளார்.