அதிமுக பொதுச் செயலாளராக 7-வது முறையாக போட்டியின்றி முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் பேசியதாவது,
“இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இன்று மீண்டும் என்னை நீங்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.
என் மீது அளவு கடந்த அன்பு கொண்டு நீங்கள் அனைவரும் ஒருமனதாக என்னை கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கழகப் பொதுச் செயலாளர் என்னும் பொறுப்பை மகிழ்ச்சியுடனும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இனி யாரும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையை நாம் படைத்திருக்கிறோம். இன்று அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார்.
காணுகின்ற இடங்களில் எல்லாம் மக்கள்தான் நமக்குத் தெரிகிறார்கள். தமிழக மக்களுக்கும் இன்று தெரிகின்ற, அவர்கள் அடையாளம் கண்டு கொள்கின்ற ஒரே அரசியல் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என முதல்வர் ஜெயலலிதா பேசினார்.