புதுடெல்லி, ஆகஸ்ட் 30 – இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைகளுக்காக 197 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்கும் ரூ.6 ஆயிரம் கோடியிலான (மலேசிய ரிங்கிட் 33,300,00,000) ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஆயுத கொள்முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ரூ.17,500 கோடியில் பல்வேறு ஆயுதங்கள், தளவாடங்களை உள்நாட்டு தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்குவதற்கும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு நீர்மூழ்கி கப்பல்கள் சீரமைக்கப்படும், புதிதாக 118 அர்ஜுன் ரக பீரங்கிகள் வாங்கப்படும்.
இந்திய-சீன எல்லையில் தகவல் தொடர்பு வசதிக்காக தனியாக நடமாடும் தகவல் தொடர்பு கருவிகள் அமைக்கவும் ஒப்பந்தம் கோரப்படும். ராணுவத்துக்கான ஆயுதங்கள், தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
அதற்கேற்ப இந்த முடிவையும் சேர்த்து, உள்நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.40 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.