Home அவசியம் படிக்க வேண்டியவை “சீனி ஐயா படைப்புகளை காலத்தால் அழியாது உயிர்ப்புடன் பாதுகாப்போம்” – மின்னியல் பதிவு திட்டத்திற்கு இளந்தமிழ்...

“சீனி ஐயா படைப்புகளை காலத்தால் அழியாது உயிர்ப்புடன் பாதுகாப்போம்” – மின்னியல் பதிவு திட்டத்திற்கு இளந்தமிழ் ஆதரவு  

1034
0
SHARE
Ad

IMG_2773

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 –  ‘செல்லியல்’ தகவல் ஊடகத்தின் சார்பில் அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக இணையத் தளத்தில் பதிவேற்றும் திட்டத்தை செல்லியல், செல்லினம் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் இன்று அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் செல்லியலுக்கு உறுதுணையாக செயல்பட  உத்தமம் மலேசியா சார்பில், அதன் தலைவர் திரு சி.ம.இளந்தமிழ் அவர்களும் இணைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

உத்தமம் என்பது உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்ற பெயர் கொண்ட அனைத்துலக அமைப்பாகும். இந்த அமைப்பின் மலேசியக் கிளையின் தலைவராக இளந்தமிழ் செயலாற்றி வருகின்றார்.

இது குறித்து இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்துரைத்த இளந்தமிழ்,“அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் திட்டம் முறையாகவும், சட்டபூர்வமாகவும் செயல்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் அன்னாரின் குடும்பத்தினரின் எழுத்துபூர்வ அனுமதியோடு மேற்கொள்ளப்படுகின்றது” என்று கூறினார்.

“சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளை நாங்கள் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டும் என்ற நோக்கமும் எங்களுக்கில்லை. அவரது படைப்புகளுக்கு இதன் மூலம் காப்புரிமை எதனையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் செய்யப்போகும் பணிகளுக்கு மட்டுமே நாங்கள் முன் அனுமதியை அன்னாரின் குடும்பத்தினரிடம் இருந்து பெற்றிருக்கின்றோம். எனவே, அன்னாரின் படைப்புகளை வேறு கோணத்தில், வேறு வழியில், பாதுகாக்கவோ, பரப்பவோ யாராவது முன்வந்தாலும் அவர்கள் தாராளமாக செய்யலாம். தேவைப்பட்டால் நாங்கள் எங்களின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம்” என்றும் இளந்தமிழ் கருத்துரைத்தார்.

மேலும் இந்த திட்டத்தில் தனது பங்கேற்பு குறித்து கருத்துரைத்த இளந்தமிழ் “இந்த திட்டம் முழுமையடைந்து செயலாக்கம் பெறும்போது இதன்மூலம் வருமானம் எதுவும் கிடைத்தால், அவை அனைத்தும் முழுக்க முழுக்க சீனி ஐயாவின் குடும்பத்தினருக்கே வழங்கப்படும்” என்றும் உறுதியளித்துள்ளார்.

“ஒரு நல்ல தமிழறிஞர் காலத்தால் மரணத்தை எய்தினாலும், அவரது படைப்புகள் அவரை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும், தமிழுலகம் அவரைக் கைவிட்டு விடாது என்பதை எடுத்துக்காட்டுவதும் எங்களின் நோக்கம்” என்றும் இளந்தமிழ் கூறியுள்ளார்.

சீனி நைனா முகம்மதுவின் அரிய எழுத்துப் படிவங்களை மின்னியல் பதிவுகளாக்கி இணையத்தில் பதிவேற்றும் திட்டத்திற்கு முத்து நெடுமாறன் பொறுப்பேற்றுள்ளார்.

சீனி ஐயாவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் திட்டம் குறித்து சி.ம.இளந்தமிழ் வழங்கிய காணொளி நேர்காணலை கீழ்க்காணும் இணைப்பின் வழி காணலாம்.