Home அவசியம் படிக்க வேண்டியவை சிவாஜியின் மூன்று தலைமுறைகளுக்கும் பாடல் எழுதி சரித்திரம் படைத்திருக்கும் வைரமுத்து

சிவாஜியின் மூன்று தலைமுறைகளுக்கும் பாடல் எழுதி சரித்திரம் படைத்திருக்கும் வைரமுத்து

745
0
SHARE
Ad

Vairamuthuஆகஸ்ட் 31 – உடல் நலம் குன்றி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், தனக்கு வந்த ஒரு பாடல் எழுதும் வாய்ப்பை மறுக்காமல், அண்மையில் எழுதி முடித்திருக்கின்றார் கவிப்பேரரசு வைரமுத்து.

காரணம், பாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம் அல்ல.

அந்தப் பாடலை எழுதியதன் மூலம், தமிழ் சினிமாவின் சரித்திரப் பக்கங்களில் தன்னை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்பதால்தான்!

#TamilSchoolmychoice

ஏற்கனவே, ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம் பிடித்தவர்தானே வைரமுத்து – ஏன் சரித்திரத்தையே மாற்றியவர்தானே வைரமுத்து – இப்போது மட்டும் அவர் பாடல் எழுதுவதில் என்ன புதுமை என நீங்கள் கேட்பது புரிகின்றது.

சிகிச்சை வேளையில் வந்த சரித்திர வாய்ப்பு

Sivaji Ganesanமுதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை முடிந்து அடுத்த நான்கு வாரங்களுக்கு முழு ஓய்வு தேவை – குறிப்பாக சிந்திக்கக் கூடாது என மருத்துவர்களும் குடும்பத்தினரும் அன்புக் கட்டளையிட்டு, கவிஞரும் அவ்வாறே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் “ஒரு மெட்டை அனுப்பி பாடல் எழுத முடியுமா என்று கேட்டிருக்கின்றார்கள்” என உதவியாளர் கவிஞரைக் கேட்டிருக்கின்றார்.

விசாரித்த கவிஞர், அந்தப் பாடல் விக்ரம் பிரபு நடித்துக் கொண்டிருக்கும் எழில் இயக்கிக் கொண்டிருக்கும் ‘வெள்ளைக்கார துரை’படத்தில் டி.இமான் இசையமைப்பில் உருவாகும் பாடல் என்பதையும் விக்ரம் பிரபுவுக்கான பாடல் அது என்பதையும் அறிந்து கொள்கின்றார்.

உடல் வலி ஒரு புறம் மையம் கொண்டிருந்தாலும், இந்தப்பாடலை மட்டும் எழுதி முடித்து விட்டால், சிவாஜி கணேசனுக்கும், அவரது மகன் பிரபுவுக்கும், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறைகளுக்கும் பாடல் எழுதிய சரித்திரப் பெருமையை பெற்றுவிடுவோமே என்ற ஆவலுடன் அந்தப் பாட்டை எழுதியிருக்கின்றார் கவிஞர்.

அந்தப் பாடல் எழுத நேர்ந்த சூழ்நிலையை தமிழகத்தின் வாரப் பத்திரிக்கை ஒன்றில் உணர்வுபூர்வமாக எழுதி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றார் வைரமுத்து.

அந்த சூழ்நிலையை அவர் பின்வருமாறு வர்ணித்துள்ளார்:

“முக்கால் மயக்கத்தில் இருந்த நான் இப்போது முற்றிலும் தெளிந்து விட்டேன். இதை எப்படி தவிர்ப்பது?அல்லது தள்ளிப் போடுவது?

விக்ரம் பிரபு என் தம்பி சகோதரர் பிரபுவின் பிள்ளையாயிற்றே. நம் பெருமைக்குரிய சிவாஜியின் பேரனாயிற்றே. ஒரு குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைக் கதாநாயகன் முளைத்து வருவது எத்துணை அருமை? அந்த அருமைக்குப் பெருமை சேர்க்க வேண்டாமா?

அவர்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் இதனால் ஒரு வரலாறு வருகிறதே. ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதாநாயகர்களுக்குப் பாட்டெழுதிய கவிஞன் என்ற சரித்திர அடிக் குறிப்பும் இதனால் சாத்தியமாகிறதே.

சிவாஜிக்கு முதல் மரியாதை முதலிய படங்கள். பிரபுவுக்கு கோழி கூவுது முதல் டூயட் வரை பல படங்கள். இப்போது விக்ரம் பிரபு.

எழுதத்தான் வேண்டும். ஆனால் இயலுமா?

வலி முதுகில் இருக்கிறது. தமிழ் மார்பில் இருக்கிறது. முயன்றுதான் பார்ப்போமே! மெட்டைக் கேட்டுக் கொண்டே உறங்கியும் போனேன்’

-இவ்வாறு எழுதியுள்ள வைரமுத்து பின்னர் கதைச் சூழலைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நள்ளிரவில் ஏற்பட்ட விழிப்பில் பாடலை எழுதி முடித்திருக்கின்றார்.

பாடல் என்ன?

“கூதக் காத்து கொல்லுதடி

கூறச் சேலை தாடி – இல்ல

கூந்தல் மட்டும் தாடி”

–    என்று தொடங்குகின்றது அந்தப் பாடல்.

Vikram-Prabhuபாடலின் இடையே “நாம் பாலும் பழமும் உண்போம் என்றது நடிகர் திலகம்தானே” என்ற வார்த்தைகளையும் பாடலை முடிக்கும்போது, “விடிகாலை வேளை நம்மை வாழ்த்தும் அன்னை இல்லம்தானே” என்ற பொருத்தமான வார்த்தைகளையும் அந்தப் பாட்டில் பொருத்தி தனது திறமையை மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கின்றார் வைரமுத்து.

அன்னை இல்லம் என்பது சிவாஜி வாழ்ந்த வீடு, தற்போது அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வரும் வீடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆக, “பூங்காற்று திரும்புமா” என சிவாஜிக்குப் பாட்டு எழுதி, பின்னர் அவரது மகன் பிரபுவுக்குப் பாட்டெழுதி, தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கும் பாட்டெழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் வரிசையில் ஒரு சரித்திரக்  குறிப்பை உருவாக்கியிருக்கின்றார், கவிப்பேரரசு வைரமுத்து.

வாழ்த்துகள்…

-இரா.முத்தரசன்