இதனால், அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சியை பிடித்ததாகவும் அவர் உடனடியாக பதவி விலக கோரியும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், மதகுரு காத்ரியும் கடந்த 14-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமாபாத்தில் பிரதமர் வீடு, நாடாளுமன்றம் உள்ளிட்டவை அடங்கிய முக்கிய பகுதியில் எதிர்க்கட்சியை சேர்ந்த போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால், பாதுகாப்பு கருதி பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு சென்றார்.
அதைத்தொடர்ந்து கராச்சி, லாகூரிலும் போராட்டம் பரவி நாட்டின் பல்வேறு பகுதியிலும் தீவிரமடைந்துள்ளது. 35,000-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சியினர் குவிந்து, பாதுகாப்பு மிகுந்த நாடாளுமன்ற வளாகத்தில் தடையை மீறி நுழைய முயன்றதால், போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில், 3 பேர் பலியானதால் பெரும் வன்முறை வெடித்தது.
கடந்த 2 நாட்களாக இஸ்லாமாபாத்தில் போலீசாருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று திடீரென ராணுவ தலைமை தளபதி ரகீல் ஷெரீப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் விலக வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைபடி, 3 மாத காலத்துக்கு அவர் பதவியில் இருந்து விலகி இருந்து, நீதி விசாரணையை சந்திக்க வேண்டும் எனவும் ராணுவ தலைமை தளபதி நெருக்கடி கொடுத்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று, செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இத்தகவலை அரசும், ராணுவமும் மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரீப், முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர்கள் ஆகியோரும் இச்செய்தியை மறுத்துள்ளனர்.
‘பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையை சமாளிப்பது குறித்து ராணுவ தலைமை தளபதியுடன் பிரதமர் ஆலோசித்தார். மற்றபடி கூறப்படுவது தவறான செய்தி‘ என்கின்றனர்.
ஆனாலும் விரைவிலேயே பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி அமலாகும் என அந்நாட்டு பத்திரிகையாளர்கள் கூறி வருவதால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.