நியூயார்க், செப்டம்பர் 2 – “இந்தியாவில் 20 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றாள். இதனை பெண்கள் மட்டுமே தடுக்க முடியாது. ஆண்களும் ஒத்துழைத்தால் இக்கொடுமைக்கு தீர்வு காண முடியும்” என ஐக்கிய நாடுகள் சபையில் பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது தகவல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வியறிவு போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து இந்தியா சார்பில் சில பிரபலங்கள் துறைவாரியாக பங்கேற்று உரையாற்றினர்.
அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற ரீதியில், மல்லிகா ஷெராவத்தும் அந்த கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர்,
“இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வகையில் உள்ளது. இதை தடுக்க அரசும், நீதித்துறையும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட பிறகும் இந்த கொடூர சம்பவங்கள் குறைந்த பாடில்லை.
20 நிமிடத்திற்கு ஒரு முறை, ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதை கடுமையான சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது.
பலாத்காரத்திற்கு எதிராக ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் தான் தடுக்க முடியும். ஜாதி பிரச்சனை, ஆணாதிக்க சமுதாயம் போன்றவையும் இந்த கொடுமைக்கு காரணங்களாக அமைந்துள்ளன.
குழந்தை திருமணங்களும் அதிக அளவில் இந்தியாவில் நடைபெறுகிறது. ஏராளமானோர் கல்வியறிவு பெற்ற போதிலும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் திருமணம் நடைபெறுகிறது.
இதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனை தடுப்பதற்கான முயற்சிகளும் கண்டிப்பாக தேவை” என்று மல்லிகா ஷெராவத் உரையாற்றினார்.