பியூனஸ் அயர்ஸ், செப்டம்பர் 2 – அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் இது பற்றி சூசகமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அர்ஜென்டினாவின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் சமீபத்தில் அந்நாட்டின் வரலாற்று நகரமான சாண்டியாகோ டெல் எஸ்ட்ரோவிற்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, நாட்டின் தலைநகரை மையப் பகுதிக்கு மாற்றுவது குறித்த யோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் முதன்மை நகரமான சாண்டியாகோவிற்குக் கூட தலைநகர் மாற்றப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதிபரின் இந்த அறிவிப்பு சாத்தியமில்லை என்று கருதப்படுகின்றது.
மேற்கத்திய நாகரிகம் நிறைந்து காணப்படும் பியூனஸ் அயர்ஸ் மீது மற்ற பகுதிகளில் காணப்படும் விரோதத்தை அமைதிப்படுத்தும் விதமாகவே அதிபர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இது பற்றி நடுநிலையாளர்கள் கூறுகையில், “உலகக் கடன்தாரர்களுக்கு அர்ஜென்டினா செலுத்தத் தவறிய வங்கிக்கடன் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் அறிவித்த 36 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் போன்றவற்றால் நிதி நெருக்கடி மிகுந்துள்ள இந்த காலகட்டத்தில் தலைநகரை மாற்றுவதென்பது இயலாத காரியம்” என்று கூறியுள்ளனர்.