சென்னை, செப்டம்பர் 2 – “நான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தான். இப்படத்தின் மூலமே எம்.ஜி.ஆரை சந்திக்கவும், பேசவும் வாய்ப்பு கிடைத்தது” என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த வெற்றிப் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாடுகிறது.
இதற்காக, அந்தப் படத்தை மறுவெளியீடு செய்த திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது,
“காலத்தால் அழிக்க முடியாத காவியமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னை நேரில் வந்து அழைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.”
“இப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.
1965 -ஆம் ஆண்டே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இன்று வெள்ளிவிழா காணும் அளவுக்கு வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது, காலத்தை கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக விளங்குகிறது.”
“புதிய படங்கள் சாதிக்க முடியாததை ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது.
ஏனென்றால், இந்தத் திரைப்படம் தான், நான் அரசியலுக்கு வருவதற்கும் அடித்தளமாக அமைந்த படம்” என கூறியுள்ளார் ஜெயலலிதா.