எஸ்டோனியா, செப்டம்பர் 4 – அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் ஸ்காட்லாப் ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டது, அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதாக ஒபாமா சபதம் விடுத்துள்ளார். ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்க்கும் விதமாக, பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திர்ககையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் ஸ்காட்லாப் ஆகிய இருவரையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்.
முதலில் ஜேம்ஸ் ஃபோலேவையும், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்காட்லாப்பையும் துடிக்கத் துடிக்க கொன்று அதன் காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை எச்சரிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட இரு சம்பவங்களும் உண்மையானது என அமெரிக்க தடவியல் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஒபாமா கூறியதாவது, “ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவேன். நாட்டின் சிறந்த இரு இளைஞர்களை கொன்றதற்காக மட்டும் அவர்களை அழிக்க முடிவெடுக்கவில்லை. ஒட்டுமொத்த அமெரிக்காவிற்கும், ஈராக்கிற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள அவர்களை அழிக்க வேண்டியது உலக நன்மைக்கு நல்லது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், நாட்டிற்கு அச்சுறுத்தல் வரும் பொழுதெல்லாம் அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எனவே தீவிரவாதிகளை ஒழிப்பது உறுதி என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.