திருமலை, செப்டம்பர் 4 – திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்கும் அறையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
தேவஸ்தானம் சார்பில் லட்டு தயாரிக்க தேவையான நெய், அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான லட்டு தயாரிக்கு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று காலை 7.45 மணியளவில் இந்த அறையில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. தொடர்ந்து தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவஸ்தான ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக திருப்பதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் 4 லட்சம் மதிப்புள்ள அரிசி, நெய், சர்க்கரை, போன்ற பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.