கேப்டவுன், செப்டம்பர் 5 – தென்னாப்பிரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள புத்தமதத் துறவி தலாய் லாமாவுக்கு விசா வழங்க அந்நாடு மறுத்துள்ளது.
டெஸ்மண்ட் டுட்டூ, நெல்சன் மண்டேலா, எஃப்.டபிள்யூ. டீ கிளர்க், ஆல்பர்ட் லுதுலி ஆகிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 5 தென்னாப்பிரிக்கர்களின் அறக்கட்டளைகள் சார்பாக ஆண்டுதோறும் உலக அமைதியை வலியுறுத்தி மாநாடு ஒன்று நடத்தப்படும்.
கேப்டவுனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 14-ம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு விசா வழங்க தென் ஆப்பிரிக்க மறுத்து விட்டது.
இது தொடர்பாக அவரின் பிரதிநிதி நாங்ஸா சோயெடான் கூறுகையில், “சீனா – தென்னாப்பிரிக்கா உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, தென் ஆப்பிரிக்க அரசு தலாய் லாமாவுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதால், மற்ற அழைப்பாளர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கும் முடிவினை எடுத்துள்ளதாக டெஸ்மண்ட் டுட்டூ அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் ரோஜர் ஃப்ரெட்மேன் தெரிவித்துள்ளார்.