வாஷிங்டன் – தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாக உலகின் பல்வேறு தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இன்று புதன்கிழமை, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திக்கின்றார்.
வெள்ளை மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்புக்கு எதிராக சீனா கண்டனக் குரல் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், இந்தியாவில் தங்கியிருக்கும் தலாய் லாமாவை பிரிவினைவாதத் தலைவராகச் சித்தரித்து அவருக்கு எதிரானக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றது.
கடந்த முறை தலாய் லாமாவை ஒபாமா சந்தித்த போது…
ஒபாமா-தலாய் லாமா இடையில் ஏற்கனவே, பலமுறை சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆகக் கடைசியாக அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 2014ஆம் ஆண்டில் பிப்ரவரியில் நடந்தது.
தலாய் லாமாவை வெள்ளை மாளிகையில் சந்திப்பதன் மூலம் திபெத்திய போராட்டம், மற்றும் தலாய் லாமா மீதான மரியாதை ஆகிய அம்சங்களில் தனது நாடு கொண்டிருக்கும் கடப்பாட்டை ஒபாமா, சீனாவுக்கு உணர்த்துவதாக இன்றைய சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.