வாஷிங்டன், செப்டம்பர் 7 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது அறிவித்துள்ள போர், மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ராண்ட் பால் தெரிவித்துள்ளார்.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகாளாக இருந்த இரு அமெரிக்க பத்திரிக்கையாளர்களை கொடூரமாக கொலை செய்தனர். மேலும் அமெரிக்கா மீது மிகப்பெரும் போரையும் அறிவித்தனர்.
இது தொடர்பாக ராண்ட் பால் கூறுகையில், “அமெரிக்கா, தீவிரவாத குழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும். இல்லையெனில் அதன் விளைவுகள் அமெரிக்காவை பலவீனப்படுத்தும். தீவிரவாதிகளின் ஒழிப்ப்பில் அதிபர் ஒபாமாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. லிபியா போன்ற நாடுகளில் வெளிநாட்டின் தலையீடு உண்மையில் தலைகீழ் விளைவை ஏற்படுத்துகிறது. அதேபோன்ற நிலை ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தீவிரவாத குழுக்களின் வலிமை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சிரியா விவகாரத்தில் தீவிரவாதிகளை ஒழிப்பதை விட அதிபர் பஷர் அல் ஆசாத்தை தோற்கடிப்பதே ஒபாமா நோக்கமாக இருந்தது. இது போன்ற நிலைத்தன்மை அற்ற நோக்கங்கள் தீவிரவாதிகளை வலுப்பெறச் செய்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பேன் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமாக அறிவித்திருந்தார்.