ஜோர்ஜ் டவுன், செப் 7 – பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வ தொண்டூழியப் படை விவகாரம் கடந்த சில நாட்களாக அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் தொடர்பில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் இங் வெய் ஆய்க் (படம்) கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் ஏற்கனவே, சட்டமன்ற உறுப்பினர் ராயரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும், இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயத்தைப் பூசியுள்ளது.
ஜோர்ஜ் டவுன் (பட்டாணிச் சாலை) மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வந்து விளக்கம் அளிக்குமாறு தன்னார்வ தொண்டூழியப் படையின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜசெகவைச் சேர்ந்த இங் வெய் ஆய்க் அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் கைது செய்யப்பட்டார்.
தன்னார்வ தொண்டூழியப் படையானது, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாததால், அது சட்டவிரோதமானது என்று கடந்த சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது தன்னார்வ தொண்டூழியப் படையைச் சேர்ந்த 155 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடுத்து வைக்கப்பட்டனர். மேலும் பினாங்கு ஆட்சி மன்ற கவுன்சிலர் ஃபீ பூன் போவும் தடுத்து வைக்கப்பட்டார்.
ஃபீ பூன் போவை அடுத்து மலேசியா கினி செய்தி இணையத் தளத்தின் நிருபர் சூசன் லீனையும் வாக்குமூலம் தருமாறு காவல்துறை அழைத்திருந்தது.
இதற்கிடையில், இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்ற குற்றச்சாட்டு பிரிவுக்கு (Prosecution Unit) விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பினாங்கு காவல்துறைத் துணைத் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன் (படம்) தெரிவித்திருக்கின்றார்.
இந்த தன்னார்வ படையின் தலைவர்கள், மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கை குறித்து மேலும் சில விவரங்களை இணைக்க வேண்டியிருக்கின்றது எனவும் அவர் கூறியிருக்கின்றார்.