Home நாடு “காவல்துறை பணி என் குடும்பம், அதுவே என் வாழ்க்கை” – பதவி விலகிச் செல்லும்...

“காவல்துறை பணி என் குடும்பம், அதுவே என் வாழ்க்கை” – பதவி விலகிச் செல்லும் முகமட் பக்ரி

585
0
SHARE
Ad

Bakri Zininகோலாலம்பூர், செப்டம்பர் 7 – “ஒருவர் காவல்துறையில் இணைந்துவிட்டால் பிறகு என்றுமே அவர் போலீஸ்காரர்தான்” என்பதற்கேற்ப வாழ்ந்து வருகிறார் டான்ஸ்ரீ முகமட் பக்ரி சினின் (படம்). இவரது சவால்கள் நிறைந்த, பாராட்டத்தக்க 40 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

நாட்டின் மிகச் சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் என்று மதிக்கப்படும் முகமட் பக்ரி, துணை ஐஜிபியாக தேர்வு பெற்ற முதல் சபா மாநிலத்துக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மலேசிய அரச காவல்படையில் 39 ஆண்டுகாலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பெருமைமிகு அதிகாரியாகப் பணியாற்றிய நான் தற்போது ஓய்வு பெறப்போகிறேன் என்பதை நினைக்கும்போது என்னாலேயே நம்ப முடியவில்லை. காவல்துறை வேலை என்பது வெறும் பணி வாய்ப்பு மட்டுமல்ல.. அதுதான் என் குடும்பம், அதுவே என் வாழ்க்கையும் கூட,” என்று காவல் துறை பயிற்சி மையத்தில் நடைபெற்ற பிரிவுபசார நிகழ்வில் முகமட் பக்ரிகுறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

உறுதியான, அதேசமயம் நட்புடன் கூடிய அணுகுமுறைக்குப் பெயர் பெற்ற பக்ரி,தனது பணிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் சந்தித்த சவாலான தருணம் என்றால்,அது கடந்தாண்டு நிகழ்ந்த லாகாட் டாத்து ஊடுருவல்தான் என்றார்.

“ஊடுருவல் குறித்து புலன் விசாரணை நடத்திய குழுவை வழிநடத்தினேன். எங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பலியான எங்களது சக தோழர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் விசாரணையை மேற்கொண்டோம்,” என்றார் அவர்.

தனது பணிக்காலத்தில் மிகவும் நேசித்த விஷயம் என்றால், 1990களில் டாங் வாங்கியில் ஓசிபிடியாக இருந்தது முதற்கொண்டு, ஊடகவியலாளர்களுடன் நீடித்து வரும் அணுக்கமான, சிறப்பான உறவுதான் என்றும் பக்ரி குறிப்பிட்டார்.

“ஊடகவியலாளர்களுடனான எனது உறவு நிச்சயம் விசேஷமான, தனிப்பட்ட ஒன்றுதான். நிபுணத்துவ அடிப்படையில் ஒருசிலரை நான் ஏசியிருக்கலாம். ஆனாலும் நாம் அனைவரும் நண்பர்கள்தான்,” என்றார் பக்ரி.

பணி ஓய்வுக்குப் பின்னர் தனது குடும்பத்துடன் செலவிடப் போகும் நேரத்தை எதிர்நோக்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

காவல் துறையின் அடுத்த புதிய துணை ஐஜிபி இதுவரை அறிவிக்கப்படவில்லை.