Home நாடு மந்திரி பெசார் பதவி: வான் அசிசாவுக்கு தகுதியில்லை என்கிறார் ஹாடி அவாங்

மந்திரி பெசார் பதவி: வான் அசிசாவுக்கு தகுதியில்லை என்கிறார் ஹாடி அவாங்

602
0
SHARE
Ad

Wan-Azizahபெட்டாலிங் ஜெயா, செப் 6 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஏற்காமல் போனதற்கு அவர் ஒரு பெண் என்பது காரணமல்ல என்றும், ஒரு தலைவராக அவரால் இயங்க முடியாததே முக்கிய காரணம் என்றும் பாஸ் விளக்கம் அளித்துள்ளது.

மந்திரி பெசார் பதவி வகிக்கக் கூடியவருக்கு சில முக்கியமான தகுதிகள் இருக்க வேண்டும் என்றார் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்.

“நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் கேள்விகளை எதிர்கொண்டு விவாதிக்கும் ஆற்றல் அவரிடம் இல்லையெனில், அவரால் எப்படி வலுவான தலைவராகச் செயல்பட முடியும்?
இத்தகைய அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அவர் மந்திரி பெசார் பதவிக்கு தகுதியற்றவர்,” என்று ஹாடி அவாங் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூருக்கு தலைமையேற்க  வான் அசிசா பொருத்தமானவர் அல்ல என்று குறிப்பிட்ட அவர், அம்மாநிலத்தைக் கவனித்துக் கொள்ள சக்தி வாய்ந்த தலைவர் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதால், பாஸ் சார்பில் மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் கூட்டணிக்
கட்சிகள் முட்டாள்தனமாகச் செயல்பட்டிருப்பதாகச் சாடினார்.

hadi-awang“இரு பெயர்களை பரிந்துரைக்கவே பாஸ் விரும்பியது. ஆனால் சுல்தான் தரப்பில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களைப் பரிந்துரைக்கக் கோரி கடிதம் வந்தது. இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் எனில் எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம் என்பதே அர்த்தம்” என்றும் ஹாடி அவாங் (படம்) கூறியுள்ளார்.

“தங்கள் தலைவர்கள் அறிவற்றுச் செயல்படுகிறார்கள் எனப் பெயரெடுக்க பாஸ்  அனுமதிக்க முடியுமா? அரண்மனை மூன்று பெயர்களையேனும் பரிந்துரைக்கும்படி  கோரியும் ‘நீங்கள்’ ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைக்கிறீர்கள்,” என்றார் ஹாடி அவாங்.

பிகேஆர் மற்றும் ஐசெக ஆகிய இரு தரப்பிலும் மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதை  இடித்துரைக்கும் விதமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஒரே ஒரு பெயரை பரிந்துரைத்தால், சுல்தான் எவ்வாறு மந்திரி பெசாரை தேர்வு செய்வார்? இது தொடர்பான உத்தரவுகள் ஏதும் தங்களுக்குப் புரியவில்லை என (பக்காத்தான்) சொல்கிறார்கள். உண்மையில் சுல்தான் உத்தரவுகளை சரியாகப்  புரிந்து கொண்டு செயல்பட்டது நாங்கள்தான்,” என்றார் ஹாடி அவாங்.

பக்காத்தான் கூட்டணியில் பாஸ் தொடர்ந்து நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனித்துச் செல்ல யாரேனும் விரும்பினால் அதையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

“புதுக் கட்சி தொடங்குவது தங்களுக்கு நன்மை பயக்கும் எனக் கருதினால் எங்களை விட்டு விலகலாம். ஆனால் நாங்கள் பக்காத்தானில்தான் நீடிக்கிறோம்,” என்று ஹாடி அவாங் மேலும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.