செப்டம்பர் 7 – காலம் உணர்த்தும் மாற்றங்கள் எப்பொழுதும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனை திரும்பிப் பார்க்கையில் நமக்கு கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் ஆறு வருடப் பயணம் பற்றிய காணொளி ஒன்றைத் தயாரித்துள்ளது. ஆறு நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த காணொளியில், ஐபோன்களின் உருவாக்கம் மற்றும் மறு உருவாக்கம் என அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 27 தேதி, அறிமுகமான முதல் ஐபோன் 3ஜி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. அதன் 2 மெகா பிக்செல் கேமரா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதற்கு அடுத்ததாக அறிமுகமான ஐபோன் 3ஜிஎஸ்-ல் வினாடிக்கு 30 பிரேம்கள் வரை, காணொளியை பதிவு செய்யக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டது.
நாளுக்கு நாள் மாற்றங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று உலகின் முன்னணி நிறுவனமாக இருப்பதற்கு முக்கியக் காரணம், பயனர்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் அதன் தொழில்நுட்பங்களை நவீனப்படுத்தியதால் தான்.
இன்னும் இரண்டு நாட்களில் (செப்டம்பர் 9) ஆப்பிள் தனது அடுத்த தயாரிப்பான ஐபோன் 6 -ஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபோன்களின் காணொளி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
ஐபோன்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய காணொளியை கீழே உள்ள இணைப்பின் வழி காணலாம்: