Home நாடு “வான் அசிசா விமர்சனங்களால் அதிருப்தியாளர்கள் வெளியேறலாம்” – ஹாடி அவாங் திட்டவட்டம்

“வான் அசிசா விமர்சனங்களால் அதிருப்தியாளர்கள் வெளியேறலாம்” – ஹாடி அவாங் திட்டவட்டம்

491
0
SHARE
Ad

Hadi Awang.செப்டம்பர் 7–டத்தோஸ்ரீ வான் அசிசா குறித்த தனது விமர்சனங்களால் அதிருப்தி அடைந்திருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் கூறியுள்ளார்.

மந்திரி பெசார் பதவி வகிக்க வான் அசிசாவுக்கு தகுதியில்லை எனத் தாம் கருத என்ன காரணம் என்றும் அவர் விவரித்துள்ளார்.

திரெங்கானுவில் நடைபெற்ற உறுப்பினர் கூட்டத்தில், பக்காத்தான் கூட்டணியைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து உரையாற்றிய அவர், “கொசுக்கள் அதிகமாக இருக்கும்போது நம்மால் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது,” என அதிருப்தியாளர்களை இடித்துரைக்கும் விதமாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதிருப்தியாளர்கள் பாஸ்மா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

பாஸ் தலைவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கடந்த மாதம் பாஸ்மா என்ற புதிய அமைப்பை தோற்றுவித்தது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஹாடி அவாங்,”அவர்கள் விருப்பப்பட்டால் சொந்தமாக கட்சியும் தொடங்கலாம்,” என்றார்.

கடந்த கால வெளியேற்றங்களிலும் பாஸ் சமாளித்து நின்றது

பாஸ் மத்திய செயலவை எடுத்த முடிவின்படி சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசா மற்றும் அஸ்மின் அலி ஆகிய பெயர்களை ஏன் பரிந்துரைக்கவில்லை என்ற மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், கட்சியின் தலைவர் என்ற வகையில் தனக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

பாஸ் கட்சி சட்டவிதிகளின்படி குறிப்பிட்ட சில முடிவுகளை எடுக்க தமக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசா பொருத்தமானவர் எனத் தாம் கருதவில்லை என்றார்.

“அவர் தகுதியற்றவர் என்பதாலேயே அவரை நிராகரித்தோம். சிலாங்கூர் அரசாங்கத்தை வழிநடத்த சக்தி வாய்ந்த ஒருவர் தேவைப்படுகிறார். இதுதான் அவரை நிராகரிக்கக் காரணமே தவிர, அவர் பெண் என்பதால் அல்ல,” என்றார் ஹாடி அவாங்.

பாஸ் கட்சிக்குள் முன்பு நிகழ்ந்த மோதல்கள் குறித்து குறிப்பிட்ட அவர்,”தலைவர்கள் வெளியேறினர். ஆனால் கட்சி அப்படியே இருந்தது,” என்றார்.

கடந்த 1950,60,70களில் கட்சியின் நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்கள் வெளியேறியபோது ஏற்பட்ட மிக மோசமான சூறாவளியின் போதும் கூட பாஸ் தப்பிப் பிழைத்தது என்று ஹாடி அவாங் மேலும் கூறினார்.

இதற்கிடையே ஹாடி அவாங் கூறியது குறித்து கருத்துரைக்கும்படி ஐசெக மகளிர் பிரிவு தலைவர் சோங் எங்கிடம் கேட்டபோது, டாக்டர் வான் அசிசா மந்திரி பெசாராகப் பதவியேற்கும் முன்பே அவரது திறன் குறித்து எடைபோடக் கூடாது என்றார்.

“அவர் (ஹாடி அவாங்) நேர்மையாகச் செயல்படுபவராக இருந்திருந்தால் தனது அதிருப்தியை கூட்டணி வட்டத்திற்குள்ளாகவே வெளிப்படுத்தி இருக்க வேண்டும்,” என்றார் சோங் எங்.

பிகேஆர் மகளிர் பிரிவு தலைவி சுராய்டா கமாரூடீன் கூறுகையில், ஹாடி நம்பிக்கைக்கு பாத்திரமற்றவராகச் செயல்பட்டுள்ளதாகச் சாடினார்.