கோலாலம்பூர், செப்டம்பர் 9 – உலகை இணையத்தால் இணைக்க வேண்டும் என்பதே பேஸ்புக்கின் இலக்கு. இந்த வாசகத்தினை சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் கூறினார்.
அதனை மெய்பிக்கும் வகையில் பேஸ்புக்கில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆப்பிரிக்க கண்டத்தில் பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தொட்டுள்ளது.
சமீபத்தில் ஆப்பிரிக்காவில் பேஸ்புக் நிறுவனம் தனது அலுவலகத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக் பயனர்களாக மாறி வருகின்றனர்.
ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் திறன்பேசிகள் மற்றும் அதிநவீன இணைய வசதி அங்கு இல்லாவிட்டாலும், சாதாரண செல்பேசிகளின் மூலம் தங்களை பேஸ்புக்கில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் பேஸ்புக் நிறுவனமும் அனைவருக்கும் இணையம் என்ற அதன் செயல் திட்டத்தின் கீழ், ஜாம்பியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் இலவச இணைய வசதியை ஏற்படுத்தி உள்ளது. பேஸ்புக் உட்பட 13 இணையச் சேவைகள் இலவசமாக அந்த செயலியின் மூலம் வழங்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதக் கணக்கீட்டுப் படி, விளம்பரம் மூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் 150 சதவீதத்திற்கு மேல் உள்ளது. தற்சமயம் ஆப்பிரிக்காவிலும் பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கும் விளம்பரம் மூலம் வருவாய் அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
பேஸ்புக்கில் இதுவரை 1.3 பில்லியன் பயனர்களும், 1.5 மில்லியன் விளம்பரதாரர்களும் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மிக அதிகமாகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.