நியூயார்க், செப்டம்பர் 9 – உக்ரைனில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிரிமியா பகுதி ரஷ்யாவுடன் இணைத்தது போல் கிழக்கு பகுதியில் உள்ள சில நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைனில் கடும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க இராணுவம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் காரணமாக இரு தரப்பினரும் ஏற்பட்ட மோதல் அதி பயங்கரமாக இருந்தது.
இந்நிலையில், தற்சமயம் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை துணை பொதுச்செயலாளர் இவான் சைமனோவிக் கூறுகையில்,
“கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற சண்டையில் இதுவரை 2729 பேரும், மாஸ் விமானம் எம்எச் 17 வீழ்த்தப்பட்டதில் 298 பேரும் பலியாகியுள்ளனர்.”
“இதுவரை கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.