வாஷிங்டன், செப்டம்பர் 9 – இந்தியாவில் அல்-கொய்தா அமைப்பு செயல்பட வில்லை என அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் பீட்டர் பெர்கன் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்தியா, அல்-கொய்தாவின் கடும் தாக்குதலை சந்திக்க இருக்கின்றது. அதற்காக இந்தியாவில் அல்-கொய்தாவின் துணை அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் பீட்டர் பெர்கன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது:- “தெற்கு ஆசியாவில் அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகின்றது.
இந்தியாவில் தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக துணை அமைப்பு ஒன்றை அல்-கொய்தா அமைத்திருப்பதாக அய்மான் அல் ஜவாஹிரி கூறியிருப்பது வேடிக்கையான ஒன்று.”
“இந்தியாவில் மத அடிப்படையிலான குழுக்கள் இருப்பது உண்மை. அதன் மூலம் தீவிரவாத செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனினும், அங்கு அல்-கொய்தாவின் செயல்பாடு முற்றிலும் இல்லை.”
“தற்போது உலகின் கவனம் முழுவதும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது உள்ளது. எனவே, தங்கள் பக்கம் கவனத்தை திருப்புவதற்கே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.