ஸ்ரீநகர், செப்டம்பர் 10 – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இன்னும் 4 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் படிப்படியாக குறைந்தாலும், பல இடங்களில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 43,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டியது. இதனால் மாநிலத்தின் அனைத்து நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நகர்புறங்கள், கிராமங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ள சேதத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, தேசிய அளவிலான பேரழிவாக அறிவித்ததுடன், உடனடி சிறப்பு நிதியாக ரூ.1000 கோடியை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அறிவித்தார்.
தற்போது மழை ஓய்ந்துள்ளதால், மீட்பு பணிகள் விரைந்து நடக்கிறது. நேற்று மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரும், கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதியும் மீட்கப்பட்டனர்.
4 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி உணவின்றி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தின் 90 சதவீத ஊர்களில் வெள்ளம் சூழ்ந்து தனி தனி தீவுகள் போல மாறி துண்டிக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. மீட்பு பணியில் முப்படை வீரர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய விமானப்படையை சேர்ந்த 61 விமானங்களும், 30 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ஏராளமான படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராணுவம் சார்பில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.