சென்னை, செப்டம்பர் 10 – ஸ்வேதா பாசு போன்ற நடிகைகள் பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் ராரா, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் ஐதராபாத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் திடீரென்று கைது செய்தனர்.
நட்சத்திர தங்கும் விடுதியில் தொழில் அதிபருடன் அவர் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து போலீசார் அங்கு முற்றுகையிட்டு நேரில் கைது செய்தார்கள்.
பிரபல நடிகையான ஸ்வேதா விபசாரத்தில் கைதானது தமிழ், தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் ஸ்வேதா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சினிமா வாய்ப்பு இல்லாமல் பண நெருக்கடி ஏற்பட்டதால் இப்படி விபச்சாரத்தில் இறங்கியதாக ஸ்வேதா பாசு கூறியதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் ஒரு பெரிய சினிமா வாய்ப்பே அவருக்கு வந்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவும் ஸ்வேதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, அவருக்கு உதவவும் முன்வந்துள்ளார்.
இந்தி இயக்குநர் விக்ரம் பட்டும் ஸ்வேதா பாசுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்துள்ளார். மேலும் பல இயக்குனர்கள் ஸ்வேதாவுக்கு பட வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விஷயத்தில் குஷ்புவின் பார்வை வேறாக உள்ளது. பண கஷ்டத்தால் விபசாரத்தில் ஈடுபட்டேன் என்ற ஸ்வேதாவின் நிலை மிகத் தவறான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.
மேலும் அவர் கூறுகையில், “நிறைய நடிகைகளுக்கு இவரைப் போல் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் தொலைக்காட்சிக்கு போகலாம். அல்லது குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். இப்படி எத்தனையோ மாற்று வாய்ப்புகள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு உங்களையே நீங்கள் விற்கும் நிலைக்கு போவதை ஏற்க முடியாது. இது போன்ற செயல்களை பெற்றோர் அல்லது உடனிருப்போர் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதுதான் நெருடலாக இருக்கிறது. அவரது செயலுக்கு பெற்றோரைத்தான் நான் குற்றம் சொல்வேன்” என்றார் குஷ்பு.