பெய்ஜிங், செப்டம்பர் 13 – சீனாவில் ஆப்பிளின் ஐபோன் 6 திறன்பேசிகள், இன்னும் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு வராத காரணத்தினால், ஹாங்காங் வழியாக ‘கிரே மார்க்கெட்‘ எனும் கள்ளச் சந்தை விற்பனை மிக வேகமாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
ஆசிய அளவில் பெரும் வர்த்தக நாடான சீனாவில், ஆப்பிள் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் 6 திறன்பேசிகள், விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில், சீனப் பயனர்களுக்கு, ஹாங் காங் வழியாக கள்ளச் சந்தைகளில் அதிக விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கடத்தல் மற்றும் கள்ளச் சந்தைகளுக்கான தரகர்கள், ஹாங்காங்கின் ஆப்பிள் இணையதளம் மூலமாக ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுக்கான முன்பதிவுகளை செய்து அதனை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிக விலை வைத்து சீன பயனர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆப்பிளின் ஐபோன்களுக்கு சீனாவில் மிகப் பெரும் வர்த்தகம் இருந்தாலும், சமீப காலமாக சீனா, ஆப்பிள் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளால் ஆப்பிள் தனது தயாரிப்பினை இம்முறை அங்கு வெளியிட வில்லை என்று ஆப்பிள் வட்டாரங்களால் கூறப்படுகின்றது.
கள்ளச் சந்தை விற்பனை படு வேகமாக நடைபெற்று வந்தாலும், பல ஐபோன்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வருகையில், பல சேதங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு தான் வாங்கிய ஒரு ஐபோனின் f5 பொத்தான் ஏறக்குறைய உடைந்தே இருந்ததாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு வாங்கப்படும் திறன்பேசிகள் போலிகளுக்கு வழிவகுக்கும் என தொழில்நுட்ப வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.