இலண்டன், செப்டம்பர் 16 – பிரிட்டன் பிணைக்கைதி டேவிட் ஹெய்ன்ஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஹெய்ன்ஸின் தலையைத் துண்டித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த அவர்கள் வேட்டையாடப்படுவர் என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பு நிபுணர் ஹெய்ன்ஸ், சிரியாவில் போராட்ட காலத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அமெரிக்காவுடன் பிரிட்டன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக இராணுவத் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அவர் தலை துண்டித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஹெய்ன்ஸின் மரணம் குறித்து டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
“டேவிட் ஹெய்ன்ஸின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ள இந்த நிலையில் அவர்கள் தைரியத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். மனிதாபிமான முறையில் தொண்டாற்றிய ஒரு அப்பாவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தகுந்த பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். இது தீய சக்திகளின் செயலாகும். எங்களது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி கொலையாளிகளை வேட்டையாடுவோம்.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தங்களின் அடுத்த குறி, தங்களின் பிடியில் உள்ள ஆலன் ஹென்னிங் என்ற பிரிட்டன் பிரஜை என ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.