கோலாலம்பூர், செப்டம்பர் 16 – மலேசியா ஏர்லைன்ஸின் மேலாண்மை இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அகமட் ஜுஹாரி யாஹ்யா (படம்) பணி ஒப்பந்தத்தை மேலும் ஓர் ஆண்டு நீடிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
“ஜுஹாரியின் பணி ஒப்பந்தம் செப்டம்பர் 20, 2014 முதல் செப்டம்பர் 19, 2015 வரை நீட்டிக்கப்படுகின்றது. அதனால் அடுத்த ஆண்டு வரை அவர் தனது பதவியில் நீடித்து இருப்பார்” என்று அறிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்ற இவரின் தலைமையின் கீழ் மாஸ் நிறுவனம் பல்வேறு சோதனையான வரலாற்று நிகழ்வுகளை சந்தித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மாஸின் எம்எச் 370 மற்றும் எம்எச் 17 பேரிடர்கள் அந்நிறுவனத்தை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளன. எனினும் இந்த நிலையில் இருந்து மீண்டு வர அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
அதனால் தற்போதய நிலையில் சரியான மாற்றம் ஏற்படும் வரை அகமட் ஜுஹாரி தலைமையில் மாஸ் இருப்பதே சிறந்ததாக இருக்கும் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மாஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.