திரிபோலி, செப்டம்பர் 16 – லிபியாவில் 250 பேர் பயணம் செய்த படகு கடலில் மூழ்கியதில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ஆப்பரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் தொற்று நோய்கள் காரணமாக அந்நாடுகளின் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் லிபியா மற்றும் சிரியாவில் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுமதியின்றி படகுகளில் சட்டவிரோதமாக செல்கின்றனர்.
அவ்வாறு நேற்று 250 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று, லிபியாவின் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள தஜீரா பகுதிக்கு வந்த பொழுது கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த லிபியா கடற்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கடும் அலைகளுக்கு இடையே மீட்புப் பணிகளில் இதுவரை 36 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும், இதனால் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இதே போன்றதொரு படகு கடலில் கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
படங்கள் : EPA