பாரிஸ், செப்டம்பர் 16 – ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு நாள்தோறும் 10 முதல் 15 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
மலிவு விலை விமான நிறுவனங்களாலும், வளைகுடா நாடுகளில் உள்ள அரச குடும்பகளின் ஆதரவு பெற்ற விமான நிறுவனங்களாலும் ஐரோப்பாவில் இயங்கும் பல்வேறு விமான நிறுவனங்கள் கடும் தொழிற்போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றன. இப்போட்டிகளை சமாளிக்கும் விதமாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் தங்களின் பெரும்பாலான விமான சேவைகளை குறைந்த கட்டண நிறுவனமான ‘டிரான்ஸ்வியா’ (Transavia)-விற்கு மாற்ற இருப்பதாகத் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து விமானிகளின் பணி இடங்களும் மாற்றப்படுவதை எதிர்த்து ஏர் பிரான்ஸ் விமானிகள் ஒரு வார கால வேலை நிறுத்தத்தைத் நேற்று தொடங்கினர். இதன் காரணமாக 50 சதவீதத்திற்கும் குறைவான விமானங்களே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தின் தொடர்பாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது:-
டிரான்ஸ்அவியாவில் பணி புரிய சம்மதிக்கும் விமானிகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் கிடைக்கும் நன்மைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை ஏற்றுக் கொள்ள ஏர் பிரான்ஸ் தயாராக உள்ளது. எனினும் விமானிகள் தொழிற்சங்கத்தின் கீழ் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.” என்று கூறியுள்ளது.
மேலும் விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக நாள்தோறும் 10 முதல் 15 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படும்.என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல் ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவன விமானிகளும் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இன்று எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் நகரத்தின் சார்ல்ஸ் டிகால் விமான நிலையத்தில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதை அறிவிக்கும் அறிவிப்புத் திரையின் முன் நடந்து செல்லும் பாதிக்கப்பட்ட பயணிகள்.
ஒருவார கால வேறு நிறுத்தம் காரணமாக, ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் தனது நிர்ணயிக்கப்பட்ட சேவைகளைப் பாதியாகக் குறைத்து விட்டது.
நேற்று தொடங்கிய வேலை நிறுத்தம், எதிர்வரும் 22 செப்டம்பர் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் : EPA