Home நாடு கேள்வித்தாள் வெளியான விவகாரம்:  4 ஆசிரியர்கள் கைது

கேள்வித்தாள் வெளியான விவகாரம்:  4 ஆசிரியர்கள் கைது

483
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassinகோலாலம்பூர், செப்டம்பர் 15 – யூபிஎஸ்ஆர் தேர்வுகளுக்கான ஆங்கிலம், விஞ்ஞானம் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளியானதை முன்னிட்டு, காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக நேற்றுவரை 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நால்வரும் பினாங்கு மற்றும் பாரிட் புந்தார் பகுதிகளைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாவர். அவர்களில் மூவர் ஆண்கள், ஒருவர் பெண். கோலாலம்பூரிலுள்ள காவல் துறையின் சிறப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் வழியாக இந்த கைதுகள் சாத்தியமாகியுள்ளன.

இதே விவகாரம் தொடர்பில், மலேசிய தேர்வு வாரியத்தின் இயக்குநர் டாக்டர் நைமா இஷாக் மற்றும் துணை இயக்குநர் டாக்டர் வான் இலியாஸ் சாலே ஆகிய இருவரும் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

தேர்வு வாரியத்தின் இரு முக்கிய அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிவித்திருந்தார்.

தேர்வு வாரிய இயக்குநர் இடைநீக்கம் செய்யப்பட்டதால் அவரது பொறுப்புகள் அனைத்தையும் கல்வித்துறை துணை இயக்குநர் டத்தோ மிஸ்ரா இப்ராகிம்  தற்காலிகமாக கவனிப்பார் என்றும் துணைப் பிரதமர் அறிவித்திருந்தார்.

கேள்வித்தாள் வெளியானது தொடர்பான விரிவான விசாரணை தொடங்கியிருப்பதாகவும், இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி என்றும் துணைப் பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களின் தொடர்பு சாதனங்கள்

இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அவர்கள் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்திய சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 30 முதல் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் கான் கோங் மெங் தெரிவித்துள்ளார்.

தேர்வுத் தாள் கசிந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் கொண்டுவரப்பட்டு, அவர்களின் காவல் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரை பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தேர்வு வாரியத்தின் ஆறு அதிகாரிகளும் அவர்களில் அடங்குவர் என்றும் மேலும் மூவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்றும் ஒருவர் பத்திரிக்கையாளர் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

யூபிஎஸ்ஆர் விஞ்ஞானம், ஆங்கிலம் தேர்வுகள் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு புதிய சுயேச்சை குழு, கல்வி அமைச்சால் அமைக்கப்பட்டு தேர்வு வாரியத்தின் பாதுகாப்பு, ரகசியம் காப்பது, போன்ற நடைமுறைகளை மறு ஆய்வு செய்து மேம்படுத்தும் என்றும் கல்வி அமைச்சர் மொய்தீன் யாசின் அறிவித்திருக்கின்றார்.