பெங்காலான் குபோர், செப்டம்பர் 15- சிலாங்கூர் மந்திரி பெசாராக யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என பாஸ் தலைவர் டத்தோஷ்ரீ ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் மட்டுமே மந்திரி பெசார் பதவி தொடர்பாக முடிவெடுக்க முடியும் என்றும், எனவே டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் முதல்வராக நீடிக்க வேண்டும் எனத் தாம் கூறியதாக வெளியான செய்தி குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மந்திரி பெசார் பதவிக்கு மூன்று பெயர்களைப் பரிந்துரைத்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்வு செய்யும் பொறுப்பை சுல்தானிடமே ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
“பாஸ் மூன்று பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது. மற்ற கட்சிகள் என்ன செய்தன என்பது எனக்குத் தெரியாது. இனி சுல்தான் முடிவு செய்வார்,” என்று பெங்காலான் குபோர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அவர் கூறினார்.
முன்னதாக, டான்ஸ்ரீ காலிட் மந்திரி பெசாராக நீடிக்க வேண்டும் என ஹாடி அவாங் விரும்புவதாக பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஹாடி அவாங்கை சந்தித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்தே அவர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் நிக் நஸ்மியின் இக்கூற்றை முற்றிலுமாக மறுத்தார் ஹாடி அவாங்.
“ஜகார்தாவில் இருந்து இப்போது தான் நாடு திரும்பி உள்ளேன். இன்னும் நாளேடுகளைப் படிக்கவில்லை. வெள்ளிக்கிழமை பாஸ் உறுப்பினர்கள் உட்பட பலரைச் சந்தித்தேன். அவர்களில் நிக் நஸ்மியும் ஒருவராக இருந்திருக்கக் கூடும்,” என்று ஹாடி அவாங் கூறினார்.