Home நாடு சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமானதா? சட்ட நிபுணர் அறிக்கையால் புதிய சர்ச்சை!

சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமானதா? சட்ட நிபுணர் அறிக்கையால் புதிய சர்ச்சை!

932
0
SHARE
Ad

Aziz-Bhari-Legalகோலாலம்பூர், செப்டம்பர் 17 – மந்திரி பெசார் பதவியை டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் ராஜினாமா செய்து விட்ட நிலையில், அடுத்த மந்திரி பெசார் நியமிக்கப்படும் வரையில் அவர் இடைக்கால மந்திரி பெசாராக இருந்து வருவார் என சுல்தான் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், இடைக்கால மந்திரி பெசாராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலிட் இப்ராகிம் மாநிலத்தின் சார்பில் அதிகாரபூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியுமா என்ற கேள்வியை அரசியல் சட்ட நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

தண்ணீர் ஒப்பந்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துக் கையெழுத்திட டான்ஸ்ரீ காலிட்டிற்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் தற்போதைய சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம் என அரசியலமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி (படம்) கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இப்போது சிலாங்கூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசாங்கம் ஒரு கண்காணிப்பு அரசாங்கம் எனக்கூற முடியாது. இது ஒரு சட்டவிரோத அரசாங்கம்” என்று கூறியுள்ள அசிஸ் பாரி, “இப்போது சில விஷயங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகின்றது. அவற்றில் ஒன்று தண்ணீர் ஒப்பந்தம்” என்றும் கூறியுள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் பிரச்சனை பெர்லிஸ்-திரங்கானு மந்திரி பெசார் பிரச்சனைகளிலிருந்து முற்றும் வேறுபட்டது என்றார் அவர்.

பெர்லிஸ் சுல்தானும், திரங்கானு சுல்தானும் 2008-ல் அன்றைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவி முன் மொழிந்த மந்திரி பெசார்களை ஏற்க மறுக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.

அம்னோ அப்போது நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது. மக்களவையில் அப்போது மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையை தேசிய முன்னணி  இழந்திருந்தது. சில மாநிலங்களை பக்காத்தானிடம் இழந்திருந்தது.

எனவே அப்போது மாநில ஆட்சியாளர்கள் அவர்களாக செயல்படும் சூழல் உருவாகியிருந்தது. இருப்பினும் அப்போதெல்லாம் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததாகக் கருதப்பட்டவர்கள்தான்  மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்கள்.

சிலாங்கூர் மாநிலத்திலோ நிலைமை வேறு. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வான் அசிசாவை ஆதரிப்பதோடு, சத்தியபிரமாணம் செய்து அவருக்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே, சிலாங்கூர் மாநிலத்தின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத நிலையில் காலிட் இப்ராகிம் இனியும் மந்திரி பெசாராக செயல்பட்டுக் கொண்டிருப்பதும், மாநிலத்தின் அதிகாரபூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அசிஸ் பாரி உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.