கோலாலம்பூர், செப்டம்பர் 18 – கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஐஒஎஸ் 8 இயங்குதளம். நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த புதிய இயங்குதளத்தை ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5 சி மற்றும் ஐபேட்2, 3 மற்றும் 4 பயன்படுத்தும் பயனர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து தங்கள் கருவிகளில் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது ஐஒஎஸ் 8 இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்து திறன்பேசிகளில் நிறுவுவதற்கான வழிமுறைகளைக் காண்போம்:
பழைய ஐஒஎஸ் பதிப்புகளை ஒப்பிடுகையில், இந்த புதிய ஐஒஎஸ் 8 இயங்குதளத்தின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. எனினும், இதில் மேம்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் செயலிகள் பயனர்களுக்கு வியப்பளிக்கும் அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
‘ஐகிளௌட்’ (iCloud)-ல் மறுபிரதி எடுத்தல்:
இயங்குதளத்தை மேம்படுத்தும் பொழுது நமது பழைய பதிவுகள் அழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பயனர்கள் தங்கள் திறன்பேசிகளில் உள்ள தேவையற்ற தரவுகளை அழித்து விட்டு தேவையான தரவுகளை மறு பிரதி எடுத்து வைக்க வேண்டும்.
ஐகிளௌட் இயக்கத்தில் உள்ளதா என பரிசோதிக்க கீழ்காணும் கட்டளைகளை பின்பற்றவேண்டும்:
‘செட்டிங்க்ஸ்’ (Settings) -> ‘ஐகிளௌட்'(iCloud)-> ‘ஸ்டோரேஜ் & பேக்அப்’ (Storage & Backup) டேப்ஸ்களை (Tabs) க்ளிக் செய்து அதில் பேக்அப் நவ் (back up now) என்ற தொடு பொத்தானை அழுத்தி செயல்படுத்த வேண்டும்.
மறுபிரதி எடுப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கி அது நிறைவு பெறும்வரை நாம் காத்திருக்க வேண்டும். இவற்றில், ஐட்யூன்-ல் பதிவிறக்கம் செய்யாத பாடல்கள் மற்றும் காணொளிகள் ஐகிளௌட்-ல் மறுபிரதி எடுக்க இயலாது.
1. இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்ய, திறன்பேசிகளை கணினியுடன் கொடுக்கப்பட்டுள்ள கேபிள் வழியாக இணைக்க வேண்டும்.
2. ஐட்யூன் சாளரத்தை (window) திறக்க வேண்டும்.
3. பயனர்களிடம் ஐட்யூன் 11.4 பதிப்புகள் இருந்தால் ஃபைல்ஸ் (files)>டிவைசஸ்- (devices)>பேக்அப் (back up) என்ற கட்டளைகளை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் திறக்கும் சாளரத்தில் ஐஒஎஸ் டிவைஸ் பொத்தானை கிளிக் செய்யவேண்டும். மேலும், மறுபிரதி பிரிவில் (Manually Back Up and Restore) டேப்களை கிளிக் செய்யவேண்டும்.
4. பயனர்களிடம் ஐட்யூன் 10.7 இருந்தால், ஐஒஎஸ் டிவைஸ் பொத்தானை வலப்புறம் க்ளிக் செய்து அவற்றில் உள்ள பேக்அப் தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். செயல்பாடுகள் முழுவதுமாக முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
ஐஒஎஸ் 8 பதிவிறக்கம் செய்து மேம்படுத்துதல்:
ஐஒஎஸ் 8 இயங்குதளத்தை ஐட்யூன் வழியாகவோ அல்லது ‘ஒடிஎ’ (OTA) வழியாகவோ பதிவிறக்கம் செய்து மேம்படுத்த முடியும். ஒடிஎ வழியாக பதிவிறக்கம் செய்ய செட்டிங்க்ஸ்->ஜெனரல்->சாஃப்ட்வேர் அப்டேட் என்ற கட்டளைகளை தொடர்ந்தால், தோன்றும் சாளரத்தில் ‘டவுன்லோட் & அப்டேட்’ (Download&Update button) என்ற பொத்தானை க்ளிக் செய்தால், ஐஒஎஸ் இயங்குதளத்திற்கான மேம்பாடுகள் தன்னிச்சையாகவே தொடங்கி விடும்.