Home இந்தியா கபிலன் வைரமுத்துவின் புதிய நாவல் ‘மெய்நிகரி’

கபிலன் வைரமுத்துவின் புதிய நாவல் ‘மெய்நிகரி’

1029
0
SHARE
Ad

Kabilan vairamuthuகோலாலம்பூர், செப்டம்பர் 18 – கவிப்பேரரசு வைரமுத்துவின் இரண்டாவது மகனான கபிலன் வைரமுத்து விரைவில் ‘மெய்நிகரி’ என்ற நாவலை வெளியிடவுள்ளார்.

இது அவர் எழுதி பதிப்பிக்கும் பத்தாவது புத்தகம் ஆகும். இந்த நாவல் இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நாவல் குறித்து கபிலன் தனது அறிமுகத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னையில் மாடப்புறா என்ற தனியார் தொலைக்காட்சி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தயாரிக்க முடிவு செய்கிறது. நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக ஓர் அணியை உருவாக்க நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த ஐந்து இளைஞர்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் அனுபவமே – மெய்நிகரி” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கதை சொல்லும் கதாப்பாத்திரம்

மெய்நிகரி என்ற இந்த நாவலில் கதை சொல்லியாக வரும் கதாப்பாத்திரம் யார் என்ற சிறு குறிப்பையும் கபிலன் தனது அறிமுகத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“ஒளிப்பதிவு கருவியில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளைக் கணிப்பொறியில் ஏற்றியதும் அவற்றை ஒழுங்குபடுத்தி தொகுக்க உதவும் மென்பொருள் வகைகளில் ஒன்றுதான் FCP 10. துண்டு துண்டு காட்சிகளாக கணினியில் கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமுதற் கதையாக வடிவமைப்பதே படத்தொகுப்பு என்ற பணியின் அடிப்படை. படத்தொகுப்பாளர்களும் ஒருவகை கதைசொல்லிகள் தான். மெய்நிகரியின் கதைசொல்லியும் டெரன்ஸ்பால் என்ற ஒரு படத்தொகுப்பாளன்தான்.”

“சிலர் டைரி எழுதுவது போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அனுபவங்களைக் காட்சித்தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் உடையவன். தற்போது தன் அறையில் அமர்ந்து மறக்க முடியாத சில நாட்களைத் திரும்பி பார்க்கிறான். கடந்த இரண்டு வருடங்களில் தான் எடுத்த புகைப்படங்கள் செல்போன் வீடியோக்கள் என்று பல தரவுகளையும் தன் எடிட்டிங் டைம்லைனில் அடுக்கி அழகுப்படுத்துகிறான். தன் மென்பொருளின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாக பிம்பங்கள் அனைத்தையும் பென்சில் ஓவியங்களாக மாற்றி மகிழ்கிறான். இந்தப் படங்களின் பின்னணியில் தன் பின்னூட்ட குரல் (voice over) வழி கடந்தகாலம் பற்றிய விவரணைகளை வழங்குகிறான். அவனை பாதித்த மனிதர்களைப் பற்றி சிறு குறிப்பு வரைகிறான். நினைவுகள் விரிகின்றன. டெரன்ஸ்பாலின் குரலாக கதை நகர்கிறது.” இவ்வாறு கபிலன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாவலில் ராகவன், மானசா, பெனாசிர், நிலா சுந்தரம், பிரேம், சந்திரபாபு, சுந்தரம் பிள்ளை ஆகிய முக்கியக் கதாப்பாத்திரங்களையும் மாடப்புறா டிவியில் பணிபுரிபவர்களாக கபிலன் சித்தரித்துள்ளார்.

18 வது வயதில் முதல் கவிதைத் தொகுப்பு

மெய்நிகரி

தமிழ் இலக்கியத்திற்கு புதிய களங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற வேட்கை கொண்டவரான கபிலன் தனது பதினெட்டாவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

அதனைத் தொடர்ந்து, பல கவிதைகளையும் சிறுகதைகளையும் இயற்றியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதழியல் முதுகலை பயின்றபோது பூமரேங் பூமி என்ற தன் முதல் நாவலை எழுதினார். அதைத்தொடர்ந்து உயிர்ச்சொல் என்ற இரண்டாவது நாவல் வெளிவந்தது.

இந்நிலையில், கபிலனின் இந்த ‘மெய்நிகரி’ நாவல் இன்றைய இளைஞர்கள் படித்து ரசிக்கும் படியாக தனியார் தொலைக்காட்சியையும், அதன் பின்னணியில் இருக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் விறுவிறுப்பான கதையாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் தொடக்கமாக, இன்றைய நவீன சூழலுக்கு ஏற்ப மெய்நிகரி நாவலின் அறிமுகத்தளம் ஒன்றையும் இணையம் வழி தொடங்கி அதன் வழியாக நாவலை உலகளவில் கொண்டு சேர்க்கவுள்ளார்.

விற்பனை

‘மெய்நிகரி’ என்ற இந்த நாவலை மூன்று வழிகளில் வாசகர்கள் பெறலாம். ஒன்று இணையம் வழியாக கட்டணம் செலுத்தி அதன் மூலமாகவும், புத்தகம் தபாலில் கிடைத்தவுடன் நேரடியாக பணம் செலுத்தியும் மற்றும் குறிப்பிட்ட கடைகள் மூலமாகவும் இந்த நூலைப் பெறலாம்.

இந்த நூல் குறித்த மேல் விபரங்களுக்கு http://www.meinigari.com/index.php என்ற இணையப் பக்கத்தை வாசகர்கள் பார்வையிடலாம்.

செய்தி -ஃபீனிக்ஸ்தாசன்