சென்னை, செப்டம்பர் 19 – இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கூட்டாளி நிறுவனமாக கருதப்படும் ‘லைக்கா நிறுவனம்’ தயாரிக்கும் ‘கத்தி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான ‘லைக்கா நிறுவனம்’ கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கக் கூடாது என்பது தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. ஆனால் இதையும் மீறி கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதனால் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கத்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை முற்றுகையிட சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை விழா நடைபெறும் இடத்திற்கு சற்று முன்பே தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்படியே சாலையில் அமர்ந்த அவர்கள் கத்தி திரைப்படத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால் இதை போலீசார் அனுமதிக்கவில்லை.
சாலை மறியல் செய்து முழக்கங்களை எழுப்பிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.