Home நடந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறிய “செல்லியல்” அறிமுக விழா – இனி கையடக்கக் கருவிகளில் தமிழில் செய்தி சேவை!

சிறப்பாக நடந்தேறிய “செல்லியல்” அறிமுக விழா – இனி கையடக்கக் கருவிகளில் தமிழில் செய்தி சேவை!

869
0
SHARE
Ad

Selliyal-launch-2-sliderபிப்ரவரி 23 – மலேசியாவில் முதன் முறையாக தமிழ்-ஆங்கிலம் என இரு மொழிகளில் கைத் தொலைபேசிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் தொடங்கப்படும் ”செல்லியல்” செய்தி சேவைகளின் அறிமுக விழா இன்று காலை 10.30 மணியளவில், தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

இதன் மூலம் இனி ஐபோன்(iPhone), ஐபேட் (iPad) மற்றும் அண்ட்ரோய்ட் (android) எனப்படும் எல்லா கைத்தொலைபேசிகளிலும் செல்லியல் செய்தி சேவைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக இந்த கருவிகளில் இணைய தொடர்பு சேவை முன்கூட்டியே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐபோன், ஐபேட் கருவிகளில் எப்ஸ்டோர் (appstore) என்ற தளத்திலிருந்தும் அண்ட்ரோய்ட் கருவிகளில் பிளேஸ்டோர் (playstore) என்ற தளத்திலிருந்தும் செல்லியலை இனி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

தமிழ் ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செல்லியலின் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வரவேற்புரையாற்ற, செல்லியலின் தொழில் நுட்பவடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக செல்லியலின் சிறப்பு அம்சங்களையும் அதன் உள்ளடக்கத்தில் அடங்கியுள்ள தொழில் நுட்ப அம்சங்களையும் விவரித்தார்.

செல்லியல் உருவான விதம்

தனது வரவேற்புரையில் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் செல்லியல் உருவான விதம் குறித்தும் அதன் உள்ளடக்கம் குறித்தும் விவரித்தார்.

தமிழ் அகராதிகளிலும் தொழில் நுட்ப விளக்கங்களிலும் கைத்தொலைபேசிக்கு “செல்பேசி” என்ற பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை வைத்து அந்த பெயரிலிருந்து “செல்” என்ற வார்த்தையையும், இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் கூறுகளில் முதல் இலக்கியக் கூறான இயல் என்ற வார்த்தையையும் இணைத்து செல்லியல் என்ற ஒரு புதிய தமிழ்ச் சொல்லை உருவாக்கி அதனையே இந்த செய்தி சேவைக்கு பெயராக வைத்தோம்  என முத்தரசன் தெரிவித்தார்.

இணைய முகவரிகள் வழியும், கைத்தொலைபேசி குறுஞ்செய்திகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்காக செல்லினம் என்ற செயலியை ஏற்கனவே செல்லியலின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் உருவாக்கி உள்ளதாலும் அதன் தொடர்பிலும் செல்லியல் என்ற பெயர் வைக்கப்பட்டதாக கூறிய முத்தரசன் செல்லினம் என்ற செயலி “தமிழில் இதுவரை இருந்தது மெல்லினம், வல்லினம், இடையினம் என்ற மூவினம் – தற்போது நான்காவதாக சேர்ந்திருப்பது இந்த செல்லினம்” என கவிப் பேரரசு வைரமுத்துவால் பாராட்டப்பட்ட செயலி செல்லினம் என்றும் தெரிவித்தார்.

எந்த ஒரு அரசியல் தலைவரையோ, அரசியல் கட்சியையோ சார்ந்திராத நடுநிலைக் கொள்கையை செல்லியல் பின்பற்றும் என்றும் இயன்ற வரையில் சுதந்திரமான கருத்துக்களை கட்டுப்பாடுகளின்றி செல்லியலில் பதிப்பிக்கப்படும் என்றும் முத்தரசன் மேலும் கூறினார்.

செல்லியலின் தொழில் நுட்ப அம்சங்கள்

செல்லியலின் தொழில்நுட்ப அம்சங்களை அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் ஏறத்தாழ ஒரு மணி நேரம் விரிவாக விளக்கினார்.

கணிணியில் ஆரம்ப காலத்தில் தமிழ் நுழைக்கப்பட்ட விதம் குறித்தும் பின்னர் படிப்படியாக அதன் பரிணாம வளர்ச்சிகள் குறித்தும் குறிப்பாக முரசு தமிழ் மென்பொருள், செல்லினம், செல்லியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் மொழி எவ்வாறு நவீன தொழில் நுட்பத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டது என்பது குறித்தும் முத்து நெடுமாறன் விவரித்தார்.

கணிணியில் தொடங்கிய தொழில் நுட்பம் எவ்வாறு காலப்போக்கில் கைத்தொலைபேசிகளிலும், கையடக்கக் கருவிகளுக்கும் வந்து சேர்ந்தன என்றும் தற்போதைய நவீன தொழில் நுட்பத்தின் வடிவமாகவும், பொதுமக்களை தகவல் ஊடகங்களின் வழி இணைக்கும் முக்கிய தளமாகவும் கையடக்கக் கருவிகள் மாறிவிட்டன என்பதையும் முத்து நெடுமாறன் சுவாரசியான திரைக் காட்சிகளுடன் விவரித்தார்.

பின்னர் செல்லியலின் பயன்பாடுகள் குறித்தும் அதன் மூலம் எவ்வாறு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்றும் இனி செய்திகளை செல்லியலில் திரைக் காட்சிகளுடன் கண்டு களிக்கலாம் என்றும் முத்து நெடுமாறன் கூறினார்.

செல்லியல் அறிமுக விழா நிகழ்வில் உலகின் மற்ற நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும் அனுப்பிய வாழ்த்து செய்திகள் திரைக்காட்சிகள் வடிவத்தில் இடம் பெற்றன.

செல்லியல் தற்போது முற்றிலும் இலவச சேவை

செல்லியல் செய்தி சேவைகள் எதிர்வரும் மே மாதம் முதல் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆனால் இந்த சேவையை தொடர்ந்து இலவசமாக வழங்குவது வணிக ரீதியாக பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதால், மே 1ஆம் தேதிக்குப் பின்னர், குறிப்பிட்ட கட்டணம் விதிக்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் தனது விளக்கத்தில் கூறினார்.

எப்படியிருந்தாலும் அந்த கட்டணம் மாதம் 10 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் முத்து நெடுமாறன் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் பிளேக் பெரி (Black Berry) கைத்தொலைபேசிகளிலும் மற்றும் விண்டோஸ் (Windows) இயங்கு தளத்தைப் பயன்படுத்தும் நோக்கியா போன்ற கைத்தொலைபேசிகளிலும் செல்லியல் அறிமுகப்படுத்தப்பட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் முத்து நெடுமாறன் கூறினார்.

கேள்வி பதில் அங்கம்

பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் கலந்து கொண்டவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் முத்து நெடுமாறனும், முத்தரசனும் விளக்கமளித்தனர்.

பிற்பகல்1.00 மணியளவில் செல்லியல் அறிமுக விழா இனிதே நிறைவுற்றது.

(புகைப்படம்: செல்லியல்  அறிமுக விழாவில் அதன் தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் (இடது) மற்றும் அதன் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)