பிப்ரவரி 23 – மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (படம்), 11 நாள்களுக்குப் பிறகு இந்திய தூதரகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் பிப்ரவரி 13ஆம் தேதி தனது சொந்த விருப்பத்தின் பேரில் தலைநகர் மாலேயில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தார். கடந்த 11 நாள்களாக அங்கேயே தங்கியிருந்த அவர், சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு வெளியேறினார்.
இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் இந்திய அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இனி வழக்கம்போல நஷீத் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஈடுபடுவார் என நம்புகிறோம்.
மாலத்தீவில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு மற்றும் அரசியல் கட்சிகளுடன் இந்திய அரசு இணைந்து செயல்படும். உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல், அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கும்.
இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில், அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் அமைதியைக் கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்.
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு அதிபர் முகமது வாஹீதின் செய்திப் பிரிவு செயலாளர் மசூத் இமாத் கூறுகையில், “இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். நஷீதுக்கு எதிராக இப்போதைக்கு கைது ஆணை (வாரண்ட்) எதுவும் இல்லை” என்றார்.
அதிபராக இருந்தபோது, குற்றவியல் தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டதாக நஷீத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நஷீதுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த 13ஆம் தேதி இந்திய தூதரகத்தில் அவர் தஞ்சம் புகுந்தார்.
செப்டம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக அரசியல் உள்நோக்கத்துடன் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக நஷீத் ஆதரவாளர்கள் கூறினர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்ளா தலைமையிலான குழுவினர் மாலத்தீவு சென்று, அரசுடன் பல்வேறு கட்டமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நஷீத் மீதான கைது ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.