Home நாடு தேர்வுத்தாள் வெளியான விவகாரத்தில் இன ரீதியில் நடவடிக்கையா? வேதமூர்த்தி கேள்வி

தேர்வுத்தாள் வெளியான விவகாரத்தில் இன ரீதியில் நடவடிக்கையா? வேதமூர்த்தி கேள்வி

637
0
SHARE
Ad

Waythamurthy 300 x 200கோலாலம்பூர், செப்டம்பர் 22- யுபிஎஸ்ஆர் கேள்வித்தாள் வெளியானது தொடர்பில் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு, இந்த விவகாரம் இன ரீதியில் அணுகப்படுவதுதான் காரணமா? என இண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வித்தாள் வெளியான விவகாரம் தேசியப் பள்ளிகளுடன் தொடர்புடையது என்றும், தமிழ்ப் பள்ளிகளுக்கு இதில் தொடர்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“அப்பாவித் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களைக் கைது செய்வதன் வழி கல்வி அமைச்சும், காவல் துறையும் பழியை வேறிடத்தில் சுமத்த வழி செய்கின்றனவோ என இண்ட்ராப் கருதுகிறது,” என அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் கைதான ஆசிரியர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப் பட்டிருப்பதற்கும் முன்னாள் துணையமைச்சரான அவர் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

“உன்னதமான ஆசிரியப் பணியைச் செய்து வரும் அவர்களை இவ்வாறு நடத்தியிருக்கக் கூடாது. கேள்வித்தாள் வெளியானது தொடர்பில் தேர்வு வாரியத்தில் பொறுப்பில் உள்ள உண்மையான குற்றவாளிகள் குறித்து கல்வி அமைச்சு விசாரிக்க வேண்டும்,” என வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

“கல்வித்துறை உயரதிகாரிகள் யாருமே இதுவரை கைது செய்யப்படாதது நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே உண்மையை புதைப்பதற்கான மறைமுக திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது,” என வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையிலும் கேள்வித் தாட்கள் முன் கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக 14 பேரைக் கைது செய்திருக்கும் காவல் துறையினரின் பட்டியலில் 11 பேர் இந்திய ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

“கைது செய்யப்பட்ட 11 இந்திய ஆசிரியர்களில் 10 பேர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.மேலும் ஒருவர் தேசிய பள்ளியில் போதிக்கும் இந்திய ஆசிரியர் என்ற நிலையில் பரவலாக தேசிய பள்ளிகளில் விநியோகிக்கப்பட்ட கேள்வித்  தாட்களுக்குப் பொறுப்பானவர்களை காவல் துறையினர் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது கேள்வி குறியை எழுப்பியுள்ளது” என்றும் இண்ட்ராப் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் வேதமூர்த்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்வு வாரியத்திலிருந்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதையும் அங்கேயும் தவறுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கின்றது என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.