பெங்களூர், செப்டம்பர் 22 – செவ்வாய் கிரக ஆய்வுக்காக இந்தியா அனுப்பி உள்ள மங்கள்யான் செயற்கைக்கோள் வரும் 24-ம் தேதி செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதிய மைல்கல்லை எட்ட உள்ளது.
இதை முன்னிட்டு, மங்கள்யானின் நியூட்டன் 440 திரவநிலை இயந்திரம் இன்று சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.ரூ.450 கோடி செலவில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள், கடந்த 2013 நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான சுமார் 650 மில்லியன் கிமீ தூர பயணத்தை துவங்கிய மங்கள்யானில் பல்வேறு கட்டங்களாக வழித்தட மாற்றங்கள் செய்யப்பட்டது.
2013, டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசை உள்ள பகுதியை கடந்து செவ்வாயை நோக்கி மங்கள்யான் பயணத்தை தொடர்ந்தது. தற்போது மங்கள்யான் பூமியில் இருந்து 221 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது.
மங்கள்யான் செயற்கைக்கோளில் உள்ள முக்கிய திரவநிலை எஞ்ஜின் இன்று முதல் சோதனை அடிப்படையில் 3.968 வினாடிகள் இயக்கப்பட உள்ளது.
இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவாகும். மேலும் வினாடிக்கு 2.142 மீட்டர் என்ற குறைந்த வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒரு தருணமாகும்.
மங்கள்யானின் முக்கிய திரவநிலை எஞ்ஜின் 300 நாட்களாக இயக்கப்படாமல் முதல் முறையாக இன்றுதான் இயக்கப்படுகிறது. சோதனை முடிந்த பின்னர் வரும் 24-ம் தேதி திரவ எஞ்ஜீன் முழுமையாக இயக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
இது குறித்து இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் பிச்சமணி கூறியதாவது, “மங்கள்யான் எந்த நோக்கத்திற்காக செலுத்தப்பட்டதோ அதில் முழு வெற்றி காணும் நாள் நெருங்கிவிட்டது. தற்போது மங்கள்யான் பூமியில் இருந்து சுமார் 221 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது.
நாளை சோதனை அடிப்படையில் திரவ எஞ்ஜினை இயக்குவதன் மூலம் மேலும் ஒரு மில்லியன் கிமீ தொலைவு பயணிக்கும்.இதை தொடர்ந்து செப்டம்பர் 24-ம் தேதி காலை 6.48 மணி முதல் 7.12 மணிக்குள், 24 நிமிடங்கள் மங்கள்யானின் திரவ எஞ்ஜின் இயக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டபாதையை அடையும்.
பின்னர் காலை 7.30 மணி முதல் படிப்படியாக மங்கள்யானின் வேகம் வினாடிக்கு 22.1 கிமீ வேகத்திலிருந்து படிப்படியாக 4.4 கிமீ குறைக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
8 மணியிலிருந்து 8.15 மணிக்குள் மங்கள்யான் செயற்கைக்கோளில் இருந்து பூமிக்கு தகவல் தொடர்பு கிடைக்கும். இந்த வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும்.
இதற்கு முன் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி, மற்றும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் ஆகியவை மட்டுமே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி கண்டுள்ளது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ள 51 செயற்கைக்கோளில் 21 மட்டுமே வெற்றி கண்டுள்ளது என அவர் கூறினார்.
மங்கள்யான் செயற்கைக்கோள் பெங்களூர், அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மங்கள்யான் செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் நுழைவதை பார்க்க பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி இஸ்ரோ தலைமை அலுவலகத்திற்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.